India
“விலங்குகளைப் போல் கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளோம்” - அமித்ஷாவுக்கு மெகபூபா முஃப்தியின் மகள் கடிதம்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு பிரிவை ரத்து செய்ததும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததும் நாடெங்கும் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முந்தைய நாளே, ஜம்மு காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் என அனைவரும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வெளியுலகத் தொடர்பு இல்லாமல், இணைய சேவை, தபால் சேவை என அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சீராகி வருவதாக அரசு தரப்பில் கூறி வந்தாலும், ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை இன்றளவும் திரும்பியபாடில்லை.
முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தியும் அவரது குடும்பத்தினரும் வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மெகபூபாவின் மகள் இல்திஜா ஜாவத்தும் அவரது குடும்பத்தினரும் வீட்டுச் சிறையில் உள்ளனர். இல்திஜாவை எவரும் சந்திக்க முடியாதபடி அவரது வீட்டின் முன்பு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இல்திஜா ஜாவத் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “வன விலங்குகளைப் போன்று காஷ்மீர் மக்களை அடைத்து வைத்துள்ளனர். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் காஷ்மீர் மக்களுக்கு, கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் விலங்குகளைப் போன்று மனித உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார் இல்திஜா.
மேலும், “மாநிலம் முழுவதும் தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவசர தேவைகளுக்கு கூட யாரையும் நாட முடியாமல் மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவள். சட்டத்தை மதிப்பவள்.
வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டது தொடர்பாக ஊடகங்களில் பேசியதற்காக என்னை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்படுகிறேன். காஷ்மீர் மக்களின் எண்ணங்களை பிரதிபலித்தது எந்த விதத்தில் குற்றமாகும்? எங்களுக்கு நேரும் துயரங்களை வெளியில் சொல்வது எவ்விதத்தில் தவறாகும் என்று எனக்கு புரியவில்லை” என இல்திஜா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை மறுக்கப்படுவதும், உண்மை பேசுவோர் குற்றவாளியாக நடத்தப்படுவதும் எந்த வகையில் நியாயம்? எங்களின் கைதுக்கு காரணம் என்ன?” என அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் இல்திஜா முஃப்தி.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!