India

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நடுங்கியவாறு நிவாரணப் பணி : கேரள எம்.எல்.ஏ-வுக்கு குவியும் பாராட்டு!

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாநிலங்களான தமிழகத்தின் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தேனி ஆகிய மாவட்டங்களும் கேரளா, கர்நாடகம் மாநிலங்களும் கனமழை வெள்ளத்தாலும், நிலச்சரிவுகளாலும் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை வழித்தடங்களே தெரியாத அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. கேரளாவின் வயநாடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய பகுதிகளே வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், வயநாடு கல்பெட்டா தொகுதியின் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. சசீந்திரன், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள புத்துமாலா பகுதியில் முகாமிட்டுள்ளார்.

அங்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கான நிவாரண தேவைகள் அனைத்தையும் செவ்வனே செய்து வருகிறார் சசீந்திரன். மக்களுக்குத் தேவையான உதவிகளை சசீந்திரன் செய்துவரும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி அம்மாநில மக்கள் மத்தியில் பரவலான பாராட்டைப் பெற்று வருகிறது.