India

“அப்பா இறந்ததே 5 நாட்கள் கழித்துத்தான் தெரியும்” : தொலைத்தொடர்பு வசதியில்லாமல் தவிக்கும் காஷ்மீர் மக்கள்!

காஷ்மீரில் பொது தொலைபேசியில் 2 நிமிடம் பேசுவதற்காக 2 மணிநேரம் நீண்ட வரிசையில் கண்ணீர் மல்க காத்திருக்க வேண்டி இருப்பதாக அம்மாநில மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 4ம் தேதியில் இருந்தே ஜம்மு காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

நேற்று மட்டும் பக்ரீத் பண்டிகைக்காக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு பின்னர் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் எந்த ஒரு தொலைத்தொடர்பு வசதியும் இல்லாமல், அவரசத்திற்கு எந்த உதவியையும் நாடமுடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆனால், மத்திய அரசோ காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டது என்றும், செல்போன், இணையம், கேபிள் போன்ற சேவைகள் கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறிவருகிறது. இன்றளவும் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் வீட்டுச் சிறையில் அடைபட்டும், காஷ்மீர் மக்கள் சொந்த ஊரிலேயே அகதிகள் போலவும் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், காஷ்மீர் மக்கள் வெளிமாநிலங்களில் உள்ள தங்களது உறவினர்களிடம் பேசுவதற்காக ஸ்ரீநகரில் உள்ள போலிஸ் துணை ஆணையர் அலுவலகத்தில் பொது தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர செய்திகளை மட்டுமே மக்கள் தெரியப்படுத்திக் கொள்ளமுடியும் எனவும் கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளது.

வெறும் 2 முதல் 3 நிமிடங்கள் வரை மட்டுமே ஒரு நபர் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், அந்த 2 நிமிடம் பேசுவதற்காக 2 மணிநேரத்துக்கும் மேல் நீண்ட வரிசையில் கண்ணீர் மல்க நிற்க வேண்டியுள்ளதாக அம்மாநில மக்கள் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்துப் பேசிய ஒரு நபர், “இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள எனது தந்தைக்குக் கொடுக்கவேண்டிய மருந்துகள் தீர்ந்துவிட்டது. என்னிடம் பணம் இல்லாததால் டெல்லியில் உள்ள எனது சகோதரியிடம் பேசி மருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்வதற்காக 2 மணிநேரமாக வரிசையில் காத்துக்கிடக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

அதேபோல், தனது மகனிடம் போனில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி கீழே விழுந்துவிட்ட ஒருவருக்கு அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொடுத்து எழுப்பியுள்ளனர். அதுகுறித்து பேசிய அவர், “என்னுடைய மகனும், எனது தந்தையும் ஒன்றாக வசித்து வருகிறார்கள். எனது அப்பா எப்படி இருக்கிறார் எனக் கேட்டபோது , அவர் இறந்து 5 நாட்கள் ஆனதாக மகன் கூறினான். செல்போன் வசதி இல்லாததால் என் தந்தை உயிரிழந்ததைக் கூட என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை” எனக் கதறி அழுதிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் முழுவதையும் தங்கள் சர்வாதிகாரத்தால் அடக்கி, இஸ்லாமிய பெருமக்களை ஒரேடியாக வெளியேற்றுவதற்கான முன்னேற்பாடாகவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.