India

சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு 2 மடங்கு.. எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு 24 மடங்கு உயர்வு!

2020-21ம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பழைய கட்டண முறையில் பதிவுகள் தொடங்கிய நிலையில், புதிய கட்டண விவரங்களை தற்போது சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது.

அதன் படி, 10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு ரூ.50 ஆக இருந்த தேர்வு கட்டணம் 24 மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.1200 ஆகவும், பொதுப்பிரிவினருக்கான கட்டணம் ரூ.750ல் இருந்து 2 மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.1500 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

9ம் வகுப்பு படிக்கும் போதே, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கும், 11ம் வகுப்பு படிக்கும் போதே, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கும் கட்டணம் செலுத்தி பதிவு செய்யவேண்டும்.

மேலும், 12ம் வகுப்பு எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு 5 பாடங்கள் தவிர, கூடுதல் பாடங்களுக்கு ரூ.300 கட்டணமாக செலுத்தவேண்டும். அதேபோல், பொதுப்பிரிவினர் கூடுதல் பாடத்துக்கு ரூ.150 செலுத்திவந்த நிலையில், இனிமேல் ரூ.300 செலுத்த வேண்டும்.

இதுமட்டுமல்லாமல், ஒரு சி.பி.எஸ்.இ பள்ளியில் இருந்து வேறு சி.பி.எஸ்.இ பள்ளிக்கு மாறும் மாணவர்களுக்கு மைக்ரேஷன் கட்டணம் ரூ.150ல் இருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டைச் சேர்ந்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 பாடங்களுக்கு 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாகவும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கூடுதல் பாடங்களுக்கு ரூ. 1,000ல் இருந்து 2,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பழைய முறைப்படி கட்டணம் செலுத்தியவர்கள் எஞ்சியுள்ள தொகையை இறுதிக் கெடுவுக்குள் செலுத்தவேண்டும். அவ்வாறு செலுத்தத் தவறினால் தேர்வெழுத அனுமதிக்கப்படாது என்றும் சி.பி.எஸ்.இ் அறிவித்துள்ளது.

புதிய கட்டண முறை 2019-20ம் ஆண்டு தேர்வெழுதுவோருக்கும் பொருந்தும் எனவும் தெர்விக்கப்பட்டுள்ளது. பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.