India

அழிவை நோக்கிச் செல்லும் பழங்குடி மொழிகள்... பழங்குடிகள் தினத்தையொட்டி வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

உலக பழங்குடிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பழங்குடிகள் தொடர்பான ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 2 வாரங்களுக்கு ஒரு பழங்குடியின மொழி அழிகின்றதாம்.

1982ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 9ம் தேதியை பழங்குடிகள் தினமாக ஐ.நா.சபை கடைபிடித்து வருகிறது. பழங்குடிகள் குறித்தும், அவர்களின் உரிமைகள் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் சுமார் 2,700 பழங்குடி மொழிகள் அழியக்கூடிய அபாயத்தில் இருப்பதாக இந்த ஆண்டு ஜனவரியில் ஐ.நா எச்சரித்திருந்தது. இந்த நிலையை மாற்றத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், அந்த மொழிகள் அழிந்து போய்விடும் என்றும் நிறுவனம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பழங்குடியினர் பேசும் பெருவாரியான மொழிகள் அழியும் நிலையிலிருப்பது கள ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. 2 வாரத்துக்கு ஒரு பழங்குடியின மொழி அழிவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மொழி அழிவதன் மூலம் பழங்குடியினரின் கலாசாரமும், பாரம்பரியமும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மொழியே ஒவ்வொரு பகுதிகளிலும் வாழும் மனிதர்களின் கலாசாரத்தை பாதுகாப்பதற்கான அடிப்படைகளில் ஒன்றாக விளங்குகிறது. பல்வேறு காரணங்களால் பழங்குடியின மொழிகள் வேகமாக அழிந்து வருகின்றன. இது பழங்குடி மக்களின் எண்ணிக்கைச் சுருக்கத்தையும், இன அழிவை நோக்கிய பயணத்தையும் குறிப்பதாக சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.