India
“ஃபரூக் அப்துல்லா எங்கே?” - மக்களவையில் தி.மு.க எம்.பி-க்கள் ஆவேசம்!
மாநிலங்களவையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் உருவாக்கப்படுகின்றன. இதில் லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக அமையும் என்றும் அறிவித்தார்.
மாநிலங்களவையில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலும், அந்த மசோதா நிறைவேறியது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய தி.மு.க உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர், “மக்களவை உறுப்பினர் ஃபரூக் அப்துல்லா மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் எங்கே?” என கேள்வி எழுப்பினர்.
“காஷ்மீர் தலைவர்களின் நிலைமை என்ன? அவர்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளது ஏன் என்பதை அரசு தெரிவிக்கவேண்டும். காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டு இருக்கிறார்கள். உமர் அப்துல்லாவும், மெகபூபா முஃப்தியும் நேற்று இரவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று நாடாளுமன்றம் வரவேண்டிய பரூக் அப்துல்லாவும் அவைக்கு வரவில்லை. இவர்கள் மூன்று பேரும் எங்கே? நாட்டில் அவசர நிலை நீடிப்பது போல இராணுவத்தை வைத்து இந்த மத்திய அரசு ஒரு சட்டத்தை நீக்கியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கிறது” என டி.ஆர் பாலு எம்.பி பேசினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!