India

காஷ்மீர் அந்தஸ்து ரத்து: குடியரசுத் தலைவரும் பா.ஜ.க கைப்பாவையா ? - எதிர்க்கட்சிகள் ஆவேசம் !

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீருக்கான சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக அறிவிக்கும் போதே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலத்த எதிர்ப்பு குரலை எழுப்பினர். காஷ்மீரில் சட்டசபை இல்லாத சமயத்தில் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கான அவசியம் என்ன என தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.

அதேபோல், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும் பேசினார்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்கான சட்டப்பிரிவு நீக்குவது தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாதது ஏன் என்றும், அவ்வாறு மசோதா தாக்கல் செய்யாததற்கு முன்பே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து அறிக்கை வெளியிட்டிருப்பது எப்படி செல்லும் என்றும் கேள்வி எழுப்பி காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.