India

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து - கடும் அமளிக்கு இடையே அமித்ஷா அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 1949ல் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 1954ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவரால் செயல்படுத்தப்பட்ட 35ஏ என்ற சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கும், கூச்சல் குழப்பத்திற்கும் மத்தியில் காஷ்மீருக்கான சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார் அமித்ஷா. மேலும், சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

சட்டப்பிரிவு 370 ஐ நீக்குவதன் மூலம் பிற மாநிலத்தவர்கள் அசையா சொத்துகளை வாங்க வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார். இதேபோல், 370 ஐ நீக்கியதை அடுத்து சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் 35ஏ பிரிவும் ரத்தாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகவே காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நிலவி வரும் நிலையில் மத்திய அரசு தற்போது அறிவித்திருக்கும் அறிவிப்பின் மூலம் மேலும் பரபரப்பான சூழல் நிலவும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.