India
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட வாய்ப்பு... முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் அமித்ஷா!
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் ஊடுருவ இருப்பதாக வந்த தகவலை அடுத்து கடந்த சில தினங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரது தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்த நிலையில், மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதில், காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 35ஏ மற்றும் 370 ஐ நீக்குவது தொடர்பான அறிவிப்பாக இருக்க வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சுற்றுலா பயணிகள், வெளிமாநில பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும், காஷ்மீர் மாநில எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மெகபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா உள்ளிட்ட பலர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
Also Read
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !