India

பா.ஜ.க.,வின் செயலை வியந்து பாராட்டிய அ.தி.மு.க எம்.பி : காஷ்மீர் விவகாரத்தில் மானத்தை இழந்த அ.தி.மு.க

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 1949ல் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 1954ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவரால் செயல்படுத்தப்பட்ட 35ஏ என்ற சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

அமித்ஷாவின் இந்த முடிவிற்கு எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழக எம்.பி.க்கள் வைகோ மற்றும் திருச்சி சிவா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில் இந்த முடிவுக்கு அ.தி.மு.க ஆதரவளித்திருப்பது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயமரியாதையையும் சமூக நீதியையும் கட்டி காத்து வரும் தமிழகத்தில் இருந்து இப்படி ஒரு குரல் எழுந்து இருப்பது தமிழர்களை வேதனையடையச் செய்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசுகையில், “ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து, 2 மாநிலங்களாகப் பிரிக்கும் மத்திய அரசின் முடிவை அ.தி.மு.க வரவேற்கிறது.

நாட்டின் இறையாண்மைக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னுரிமைக் கொடுத்தவர். அதனால் தான் மத்திய அரசின் இந்த முடிவை அ.தி.மு.க அரசு ஆதரிக்கிறது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த முடிவால் எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. சட்டப்பிரிவு 370 ரத்து என்பது தற்காலிகமானது ” என தெரிவித்துள்ளார்.

நவநீதகிருஷ்ணனின் இந்த பேச்சு பா.ஜ.க சார்பு விளக்கமாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் இதை எதிர்த்திருப்பார். ஆட்சியைத் தக்கவைத்து கொள்வதற்காக பா.ஜ.க எடுக்கும் மக்கள் விரோத முடிவுகளுக்கு எல்லாம் அ.தி.மு.க ஆதரவு நிலைபாடு எடுப்பது மிகவும் மட்டரகமான செயல் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.