India

காஷ்மீரில் உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு - நாளை மசோதா தாக்கல் செய்கிறார் அமித்ஷா!

ஜம்மு காஷ்மீரில் 30 ஆயிரத்துக்கும் மேலான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதால் அம்மாநிலத்தில் பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாகவும், பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவ வாய்ப்பிருப்பதாலும் இதுபோன்ற பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், காஷ்மீர் மாநில எதிர்க்கட்சிகள் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370, 35ஏவை நீக்குவதற்கு திட்டமிட்டிருப்பதுவே, இந்த ராணுவ குவியலுக்கு காரணம் என குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மேலும், ஜம்முவை தனி மாநிலமாகவும், காஷ்மீர் மற்றும் லடாக்கை யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினார். ஜம்மு காஷ்மீர் மாநில கூடுதல் செயலாளர் ஞானேஸ்வர்குமாருடனும் முக்கிய ஆலோசனை நடத்தினார் அமித்ஷா. விரைவில் அவர் ஜம்மு காஷ்மீருக்கு செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான், காஷ்மீர் மாநிலத்தில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மாநிலங்களவையில் நாளை அமித்ஷா தாக்கல் செய்ய இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.