India

ஊழல் அதிகாரியை கௌரவித்த மோடி : அஸ்தானாவுக்கு கூடுதல் பொறுப்பு!

சிபிஐ சிறப்பு இயக்குநராகப் பணியாற்றிய ராகேஷ் அஸ்தானா, அதன் இயக்குநர் அலோக்வர்மா ஆகியோருக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதல் பெரும் சர்ச்சையானது. பரபரப்பை ஏற்படுத்திய மோதலுக்குப் பிறகு அஸ்தானா விமானப் போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், விமானப்போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவு தலைமை இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தலைமை இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் கூடிய நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த அபய், ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய காவல்பயிற்சிக் கல்லூரிக்கு இயக்குனராக மாற்றப்பட்டதையடுத்து கடந்த ஜூலை 4ம் தேதி முதல் அந்த இடம் காலியாக இருந்தது. போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தலைமை இயக்குனர் நியமிக்கப்படும் வரை அல்லது 6 மாதங்களுக்கு அஸ்தானா அப்பொறுப்பில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகளில் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர். 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை, 2008ல் அகமதாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு போன்றவற்றின்போது, அன்றைய முதல்வர் மோடிக்கு உதவிகரமாகத் திகழ்ந்தவர்தான் இந்த அஸ்தானா.

மகாராஷ்டிராவில் படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தை ஒடுக்கியதிலும் அஸ்தானாவுக்கு பெரும் பங்கு உண்டு. இதன் காரணமாகவே மோடி பிரதமரானபோது அஸ்தானா சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

மேற்சொன்ன குற்றச்சாட்டுகள் போக, சனா பாபு என்கிற தொழிலதிபரை வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கியது, ‘ஸ்டெர்லிங் பயோடெக்’ முறைகேடு ஆகியவற்றிலும் ராகேஷ் அஸ்தானாவுக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரிலேயே, கடந்த நவம்பரில் சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார். அப்போது மோடி இடையில் புகுந்து ஆட்டத்தைக் கலைத்து பணியிட மாற்றம் செய்த நிலையில், மீண்டும் அவருக்கு புதிய பொறுப்புகளை வழங்கி கௌரவித்துள்ளார்.