India
உன்னாவ் விவகாரம் : சிறுமியின் தங்கையும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான கொடூரம்!
கடந்த 2017ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக சாட்சியம் அளிப்பதற்காக காவல் நிலையம் சென்ற அப்பெண்ணின் தந்தையும், சாட்சி ஒருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாலியல் புகாரளித்த பெண் நேற்று முன்தினம் தனது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ரேபரேலி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதியதில் விபத்துக்குள்ளானது. இதில் அப்பெண்ணின் உறவினர்கள் இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். புகார் கூறிய பெண்ணுக்கும், வழக்கறிஞருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
உன்னாவ் சம்பவம் தொடர்பான வழக்குகளைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. அப்போது உன்னாவ் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், தினந்தோறும் வழக்கை விசாரித்து 45 நாட்களில் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கையும் பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் ஆட்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக, அப்பெண்ணின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். பெண்கள் உரிமைக் குழு உறுப்பினர்களிடம் பேசிய அப்பெண்ணின் தாயார், வழக்கை திரும்பப் பெறுமாறு அச்சுறுத்துவதற்காக வந்தபோது குண்டர்கள் தனது இளைய மகளையும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கூறினார்.
மேலும், எம்.எல்.ஏ-வின் ஆட்கள் எனது கணவரை ஒரு மரத்தில் கட்டி வைத்து அடித்ததாகவும், தனது மாமியாரும் தாக்கப்பட்டதாகவும் கூறினார். எங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் இழப்பீடும் கிடைக்கவில்லை என்று தன் குடும்பத்துக்கு நடந்த கொடூரத்தை தெரிவித்துள்ளார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்