India
“சிறு கீறல்களால் சரியும் பெரும் கோட்டைகள்” : சித்தார்த்தாவின் ‘Café Coffee Day’ கனவு கரைந்த கதை!
வெற்றியாளர்களின் கோரமான முடிவுகள் எல்லோரையும் ஒரு நிமிடமாவது அச்சுறுத்தி விடுகின்றன. அப்படியொரு நிகழ்வு ‘காஃபி டே’ நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தாவின் மரணம். அதிலும், தொழிலில் மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்ட அவர் தற்கொலை செய்துகொண்டது பலரையும் திடுக்கிடச் செய்துள்ளது.
மங்களூரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற சித்தார்த்தா தனது 24-வது வயதில் மும்பையில் ஒரு வணிக நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றி நிர்வாக நுட்பங்களையும், தொழில் நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்த சித்தார்த்தா பெங்களூருவுக்கு வந்து சொந்தத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்.
சிக்மகளூரில் சொந்தமாக 12,000 ஏக்கர் பரப்பளவில் காபி எஸ்டேட் வைத்து, அதன் மூலம் ஆண்டுதோறும் 28,000 டன் காப்பிக் கொட்டைகளை ஏற்றுமதி செய்து பெரும் லாபம் ஈட்டி வந்தார். தனி மனிதராக இந்தியாவில் மிகப்பெரிய காபி எஸ்டேட் வைத்திருந்தவர் சித்தார்த்தா தான். அவரது ‘ஏபிசி’ நிறுவனம் இந்திய காபி துறையில் முன்னணியில் இருந்தது.
மிகப்பெரும் லாபம் ஈட்டிவந்த அவர், தனது கனவுத் திட்டமான ‘காபி ஷாப் செயினை’ 1996ம் ஆண்டு துவங்கினார். Café Coffee Day எனப் பெயர்கொண்ட அவரது நிறுவனம் இன்று இந்தியா முழுவதும் 1,823 கிளைகளுடன் பரந்து விரிந்திருக்கிறது.
சித்தார்த்தாவின் ‘காஃபி டே’, உயர் வகுப்பு மற்றும் உயர் நடுத்தர மக்களின் விருப்பத்திற்குரிய பொழுதுபோக்கிடமாக இருந்தது. விலையில்லா இண்டர்நெட் வசதியோடு, விருப்பமான காஃபி அருந்த இளைஞர்களின் தேர்வாக இருந்தது ‘காஃபி டே’.
காஃபி ஆர்டர் செய்துவிட்டு அங்கேயே அமர்ந்து ஒரு மீட்டிங்கை நடத்தலாம் எனும் அளவுக்கு வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு தராத நிர்வாகம் ‘காஃபி டே’வின் ஸ்பெஷல். இப்படியொரு சூழல் கொண்ட காபி கடைகளைத்தான் சித்தார்த்தா திட்டமிட்டு உருவாக்கினார்.
தொழிற்போட்டிகளின் காரணமாக ஒருகட்டத்தில் வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்கியதும், வருமான வரி சோதனையில் சிக்கி சட்டரீதியில் மாட்டிக்கொண்டதும், தற்போது துக்ககரமான ஒரு முடிவைத் தேடிக்கொண்டுள்ளார் சித்தார்த்தா.
37 வருடங்களில் 30,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கிய சித்தார்த்தா, தன்னை வணிக ரீதியில் தோல்வியடைந்தவர் எனக் குறிப்பிட்டு எழுதிய கடைசிக் கடிதம், அந்நிறுவன ஊழியர்களை மட்டுமல்ல; அனைவரையுமே உருக்கியுள்ளது.
நிறுவனத்தை லாபகரமாக நடத்த முடியாததற்கு தான் மட்டுமே பொறுப்பு எனத் தார்மீகத்துடன் ஏற்றுக்கொண்டுள்ள சித்தார்த்தா, இந்தத் தோல்வியில் மூத்த நிர்வாகிகளுக்கும், ஆலோசகர்களுக்கும், ஊழியர்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என அந்தக் கடிதத்தின் மூலம் உறுதியளித்துள்ளார்.
காஃபி டே நிறுவனத்திற்கிருக்கும் கடனைச் செலுத்த தனது சொத்து விவரங்களையும் கடிதத்தோடு இணைத்திருந்தார் சித்தார்த்தா. மிகப்பெரும் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பிய சித்தார்த்தா, தன் கனவில் தோல்வியடைந்துவிட்டதாகக் கருதி கர்நாடகத்தின் நேத்ராவதி ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வெற்றியாளர்களுக்கான பட்டியலில் இடம்பிடித்திருக்கவேண்டிய சித்தார்த்தாவை காலம் மிகமூர்க்கமாக வேட்டையாடியிருக்கிறது. ‘பெரும் கோட்டைகளும் சிறிய விரிசல்களால் தகர்க்கப்படும்’ என்பதை அவரது மறைவு இன்னொருமுறை உலகிற்கு அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!