India
கடிதத்தில் இருந்தது சித்தார்த்தாவின் கையெழுத்து இல்லை - வருமான வரித்துறையின் சந்தேகத்தால் தொடரும் மர்மம்!
கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், பிரபல கஃபே காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளருமான வி.ஜி.சித்தார்த்தா, மாயமான நிலையில் இன்று அதிகாலை மங்களூரு நேத்ராவதி ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதன் மூலம் அவரது மரணம் உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, சித்தார்த்தாவின் மரணம் தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த திங்களன்று சித்தார்த்தா காணாமல் போவதற்கு முன் ஜூலை 27ம் தேதி தனது நிறுவன ஊழியர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “ தான் ஒரு தொழில் முனைவோராக தோல்வி அடைந்துவிட்டதாகவும், 37 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருந்தும், பல்லாயிரக் கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியும் தன்னால் லாபம் ஈட்டமுடியவில்லை.” எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், தனது மைண்ட் ட்ரீ மற்றும் காஃபி டே நிறுவனங்களின் பங்குகளை விற்க விடாமல் வருமான வரித்துறையினர் தடையாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். முன்னாள் வருமான வரித்துறை இயக்குநர் நெருக்கடி கொடுத்தாகவும் தெரிவித்திருந்தார்.
இதனை மறுத்து, வருமான வரித்துறை பதில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ”சித்தார்த்தாவின் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியதாக சொல்வதில் உண்மை தன்மை இல்லை. கடிதத்தில் உள்ள கையெழுத்திற்கும், வருமான வரித்துறைக்கு சித்தார்த்தா வழங்கிய ஆண்டு அறிக்கையில் உள்ள அவரின் கையெழுத்திற்கும் வித்தியாசம் காணப்பட்டுள்ளது. எனவே அந்தக் கடித்தத்தில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளது,
மேலும், ”கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் வீட்டில் நடந்த சோதனையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சித்தார்த்தாவின் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது கணக்கில் வராத 480 கோடி ரூபாய் தன்னுடையதுதான் என அவரே ஒப்புக்கொண்டார். அதேபோல், அதற்கு வரி செலுத்தாததையும் ஒப்புக்கொண்டார்” என வருமான வரித்துறை தெரிவித்தது.
”அதனை அடுத்து, மைண்ட் ட்ரீயின் 21% பங்குகளை விற்க சித்தார்த்தா முடிவெடுத்திருப்பதை அறிந்து அதற்கு தடை விதித்தோம். பின்னர் மைண்ட் ட்ரீக்கு பதிலாக வேறு நிறுவனத்தின் சொத்தை தருவதாக சித்தார்த்தா தெரிவித்ததை ஏற்றோம். மைண்ட் ட்ரீ சொத்துகளை விற்றதில் 3200 கோடி ரூபாய் கிடைத்தது. அதில் 3000 கோடி கடனையும் 46 கோடி ரூபாய் வருமான வரியும் செலுத்தினார்.
இருப்பினும், மீதமுள்ள வரியை சித்தார்த்தா செலுத்தாததால் அவரது 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை சட்டப்படி முடக்கினோம்” என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, காஃபிடே நிர்வாகமோ, அந்த கடிதத்தில் இருந்த கையெழுத்து தங்கள் நிறுவனர் சித்தார்த்தாவினுடையது தான் என உறுதி செய்துள்ளனர். வருமான வரித்துறையின் விளக்கம் இப்படி இருக்க, கடிதத்தில் இருந்தது சித்தார்த்தாவின் கையெழுத்து தான் என காஃபிடே நிர்வாகம் உறுதி செய்திருக்கிறது. ஆனால், அதை வருமான வரித்துறை தரப்பு இன்னும் ஏற்கவில்லை.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு