India

வரலாற்றிலேயே முதன்முறையாக உயர்நீதிமன்ற நீதிபதி மீது ஊழல் வழக்கு பதிவு : அனுமதியளித்தார் ரஞ்சன் கோகாய்!

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுக்லா ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்குச் சாதகமாக செயல்பட்டதாக 2017ம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது. லக்னோவைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு தரம் குறைந்த உள்கட்டமைப்பை காரணம் காட்டி மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம். ஆனால், அந்த மருத்துவக்கல்லூரியில் மாணவர்களை சேர்க்க அனுமதி அளித்ததாக நீதிபதி சுக்லா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதியின்றி பதவியில் இருக்கும் ஒரு நீதிபதியின் மீது வழக்கு தொடர முடியாது. இந்நிலையில், நீதிபதி சுக்லா மீதான புகாரை விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.அக்னிஹோத்ரி, மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி பி.கே. ஜெய்ஸ்வால் ஆகியோர் கொண்ட அமர்வை அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிமிஸ்ரா அமைத்தார்.

நீதிபதிகள் குழுவினர், நீதிபதி சுக்லா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தியதில், நீதிபதி சுக்லா ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரங்கள் இருப்பதை கண்டறிந்து தலைமை நீதிபதியிடம் அறிக்கை அளித்தனர். இதைத் தொடர்ந்து நீதிபதி சுக்லாவை தாமாக முன்வந்து பதவி விலகும்படி தலைமை நீதிபதி மிஸ்ரா கோரினார். ஆனால், அதற்கு நீதிபதி சுக்லா சம்மதிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற ரஞ்சன் கோகாயிடம் நீதிபதி சுக்லாவை விசாரிக்க அனுமதியளிக்குமாறு சிபிஐ தரப்பில் இருந்து மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, சுக்லாவை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அனுமதி அளித்துள்ளார்.

இதுவரை எந்த உயர்நீதிமன்ற நீதிபதி மீதும் வழக்குப் பதிவு செய்ததில்லை. முதன்முறையாக, இப்போதுதான் பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்ய தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.