India

லோக்சபாவில் ஆதரவு... ராஜ்யசபாவில் எதிர்ப்பு : வெட்டவெளிச்சமான அ.தி.முக-வின் இரட்டைவேட நிலைப்பாடு!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம், மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் முத்தலாக் தடை மசோதாவிற்கு தேனி தொகுதி எம்.பி.,யும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் ஆதரவு தெரிவித்தார்.

ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்ற மக்களவையில் பேசும்போது, “இந்த மசோதா மூலம் சமூகத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவதற்கும், சமூகத்தில் பெரிய பதவிகளை அடைவதற்கும், பிரதமர் முயற்சி எடுத்துள்ளார். மதங்களை தாண்டி பெண்களுக்கு சம உரிமை வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.” என ஆதரித்துப் பேசினார்.

ஆனால், இன்று மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க-வின் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனை தொடர்ந்து நவநீதகிருஷ்ணன் எம்.பி-யும் முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசியுள்ளார்.

அரசியல் சட்டத்திற்கு எதிராக முத்தலாக் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பல ஆதாரங்களை சுட்டிக்காட்டி நவநீதகிருஷ்ணன் எம்.பி பேசியுள்ளார். இதன் மூலம், அ.தி.மு.க-வின் இரட்டை வேடம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

கடந்த மக்களவையில் எதிர்த்தும், இப்போது ஆதரித்தும் - முத்தலாக் மசோதா விவகாரத்தில் அ.தி.மு.க இரட்டை வேடம் போடுவதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். தற்போது, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிரும் புதிருமாகப் பேசியிருப்பதன் மூலம் முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க இரட்டை வேடமிட்டு சிறுபான்மையினரை ஏமாற்ற நினைப்பது அம்பலமாகியுள்ளது.