India

பொதுப்பட்டியலில் உள்ள மருத்துவக் கல்வியிலும் ஆதிக்கத்தை நிறுவும் பா.ஜ.க - ஆ.ராசா கொந்தளிப்பு

63 ஆண்டு காலமாக பின்பற்றப்பட்டு வரும் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956க்கு பதில், தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்.

இந்த புதிய ஆணையம், மருத்துவ கவுன்சில், ஆலோசனைக் குழு, தன்னாட்சி குழு என மூன்று பகுதிகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆணையம் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை விட தனியாருக்கே சாதகமாக அமைந்துள்ளது. எனவே, பா.ஜ.க. அரசின் இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன்பு மருத்துவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று மக்களவை கூட்டத்தின் போது, தேசிய மருத்துவ ஆணைய மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க மக்களவை கொறடா ஆ.ராசா, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்துவிடும் என்றும், இது நாட்டின் சுகாதார கட்டமைப்பையே நாசமாக்கிவிடும் என்றும் எச்சரித்தார்.

NMC மசோதாவுக்கு எதிர்ப்பு - மருத்துவர்கள் போராட்டம்

பா.ஜ.கவின் இந்த புதிய மருத்துவ மசோதாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தி.மு.க. சார்பில் முன்வைத்து பேசிய அவர், ”தேசிய மருத்துவ ஆணையம் சமூக நீதிக்கும், ஜனநாயகத்துக்கும் முற்றிலும் எதிரானது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறையிலும், பொதுப்பட்டியலில் உள்ள மருத்துவக் கல்வியிலும் மத்திய அரசு தனது ஆதிக்கத்தை நிறுவ முயற்சிக்கிறது” என ஆ.ராசா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

”பொருளாதாரத்தில் பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதே ஜனநாயக கடமை என்று, எங்களது தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் கற்றுக் கொடுத்திருக்கிறார். இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு ஜனநாயக அமைப்பு. அதில் உள்ளவர்கள் தங்களின் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்க முடியும். ஆனால் தற்போதுள்ள மத்திய அரசோ மருத்துவ ஆணையம், ஆலோசனை வாரியம் மற்றும் தன்னாட்சி குழு என்ற 3 அமைப்புகளை கொண்டு வருகிறது.

NMC மசோதாவுக்கு எதிர்ப்பு - மருத்துவர்கள் போராட்டம்

இந்த 3 அமைப்புகளிலும் 80-90 சதவிகித உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படாமல் நேரடியாக நியமிக்கப்படுகிறார்கள். முழு அதிகாரமும் மத்திய அரசின் கையில் உள்ளது. இவ்வாறு செய்வதின் மூலமாக மத்திய அரசு ஊழலை கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறதா?” என சரமாரியாக கேள்வி எழுப்பிய ஆ.ராசா, மருத்துவ ஆணையத்தில் IIT, IIM தலைவர்களை சேர்க்க வேண்டியன் அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை அமல்படுத்துவதன் மூலம் ”மருத்துவ கல்வியையே மத்திய பா.ஜ.க அரசு கேலி கூத்தாக மாற்றுகிறது” என கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வழிமுறைகள் வகுக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. அதிலும் 50% மருத்துவ இடங்களுக்கு மட்டும்தான், மீதமுள்ள 50% மருத்துவ இடங்களுக்கான கட்டணம் நிர்ணயிக்கும் உரிமையை தனியாருக்கு கல்லூரிகளிடம் கொடுத்துவிட்டு, ஏழை மாணவர்களின் கனவையும், ஏழை மக்களின் ரத்தத்தையும் உறிஞ்ச அரசு முயற்சிக்கிறது.” என ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “ ஏற்கெனவே நீட் தேர்வினால் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு கலைக்கப்பட்டு, சிலர் உயிரையும் மாய்த்துக்கொண்டனர். இருப்பினும் போராடி ஒருவழியாக ஒரு மாணவன் நீட்டில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் 70க்கும் மேற்பட்ட சதவிகிதத்திற்கு மதிப்பெண் எடுத்திருந்தாலும் மருத்துவர் பயிற்சியை பெற முடியாது. அதற்கும் நெக்ஸ்ட் என்ற தேர்வை எழுத வைக்கிறீர்கள். ஒருவேளை அந்த தேர்வில் தேர்ச்சி அடையாவிட்டால் தன் வாழ்நாளில் மருத்துவராக வேண்டி அந்த மாணவன் கண்ட கனவும் படிப்புக்கான உழைப்பு அனைத்தும் வீணாகி வெறும் 12ம் வகுப்பு படித்தவனாகவே கருதப்படுவான்” என நுழைவு தேர்வுகளின் ஆபத்துகளை எடுத்துரைத்துள்ளார்.