India

எதிர்காலத்தை அழிக்கிறதா பா.ஜ.க? : 5 ஆண்டுகளில் வெட்டப்பட்ட மரங்கள் எவ்வளவு தெரியுமா?

கடந்த 5 ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளதாக மத்திய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்புகளையும், பருவ நிலை மாறுபாடுகளையும் மனதில் கொண்டு சாமானிய மக்களும் மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை வெட்ட அனுமதியளித்ததாகத் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்துப் பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ, "கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டுவரை நாட்டில் 1,09,75,844 மரங்களை வெட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

அதிகபட்சமாக கடந்த 2018-2019ம் ஆண்டில் 26.19 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக பல்வேறு சட்டங்களின் அடிப்படையில் இந்த மரங்களை வெட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

காட்டுத் தீ மூலம் எரிந்த மரங்கள் குறித்த புள்ளிவிவரங்களும், வெட்டப்பட்ட மரங்கள் குறித்த விவரங்களும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இல்லை. கடந்த 2014-2015ம் ஆண்டில் 23.30 லட்சம் மரங்களும், 2015-2016ம் ஆண்டில் 16.90 லட்சம் மரங்களும், 2016-2017ம் ஆண்டில் 17.01 லட்சம் மரங்களும் வெட்ட அனுமதி அளிக்கப்பட்டன. 2017-2018ம் ஆண்டில் 25.50 லட்சம் மரங்களும் வெட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளன” என்றார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் மத்திய அரசு, ஐந்தாண்டுகளில் கோடிக்கணக்கான மரங்களை வெட்ட அனுமதியளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, “பா.ஜ.க நமது எதிர்காலத்தை அழித்துக்கொண்டிருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.