India
4வது முறையாக கர்நாடக முதல்வர் ஆகும் எடியூரப்பா : அவருக்கு இப்படி ஒரு சோக செண்டிமெண்ட் இருக்கா ?
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணியின் 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்தது. இதையடுத்து, குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கவிழ்ந்தது.
குமாரசாமி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத்தொடர்ந்து புதிய அரசை அமைக்கும் பணியில் கர்நாடக பா.ஜ.க தலைவர்கள் தீவிரமாக இறங்கினர். பா.ஜ.க தலைவர் எடியூரப்பா முதல்வராவார் எனக் கருதப்பட்ட நிலையில், அவருக்கு 76 வயதாவதால் பா.ஜ.க மேலிடம் அவர் முதல்வராவது குறித்து யோசனை செய்வதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.க தலைவர் எடியூரப்பா, இன்று காலை 10 மணிக்கு ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளோம் எனத் தெரிவித்தார்.
அதன்படி, ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்த எடியூரப்பா, பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை உள்ளதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார். பதவியேற்பு விழாவை இன்று மாலையே நடத்த வேண்டும் எனவும் ஆளுநரிடம் கோரியுள்ளார் எடியூரப்பா.
இன்று முதல்வராகப் பதவியேற்க இருக்கும் எடியூரப்பா, ஒரு வார காலத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என ஆளுநர் கெடு விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் சித்தராமையா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நான்காவது முறையாகக் கர்நாடக முதல்வராகப் பதவியேற்க இருக்கிறார் எடியூரப்பா. இதற்கு முன்னர் 3 முறை முதல்வராக இருந்தபோதிலும், ஒருமுறை கூட முழுமையாக ஆட்சி செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும் தேர்தலுக்குப் பிறகு ஒரு ஆண்டு முடிந்த பிறகே முதல்வராக இருக்கிறார்.
2007ம் ஆண்டு வெறும் 7 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தார் எடியூரப்பா. 2008ம் ஆண்டில் மீண்டும் பதவியேற்ற அவர் மூன்று வருடங்களுக்கு மேல் பதவியிலிருந்தார். கடந்த 2018ல் மூன்றாவது முறையாகப் பதவியேற்ற அவர் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 6 நாட்களில் பதவியை இழந்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!