India

”விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் ஏற்க மாட்டோம்” : புதுச்சேரி முதல்வர் ஆவேசம்!

தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நேற்று டெல்லியில் நாடாளுமன்றம் அருகே உள்ள ஜந்தர்மந்தரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார்.

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில்தான் அதிக அளவு நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நெல் உற்பத்தியை சீர்குழைக்கும் வகையில் மத்திய பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது. குறிப்பாக டெல்டா மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள 373 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மத்திய பா.ஜ.க அரசு வேதாந்தா நிறுவனத்துக்கும் மற்றும் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி. ஆகிய நிறுவணத்திற்கு வழங்கியுள்ளது. இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது வழக்குப் போட்டு போராட்டத்தை முடக்க நினைக்கிறார்கள்.

முன்னதாக தமிழக அரசு சார்பில் “நாங்கள் ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அனுமதியின்றி திட்டம் தொடங்கப்பட்டால் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என சட்டத்துறை அமைச்சர் கூறினார். ஆனாலும் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளும் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என விவசாயிகள் சங்கம் போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது, ”புதுச்சேரியில் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் ஏற்க மாட்டோம் என்றும், கட்சியின் பாகுபாடுகளை மறந்து மாநில மக்கள் நலனுக்காக அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம்”. என்று அவர் கூறினார்.