India

கல்வித் தகுதியைக் கேட்டதால் மோடிக்கு கோபம் ? : ஆர்.டி.ஐ அதிகாரத்தை குறைப்பது இதற்குத்தானா ?

எதிர்க்கட்சிகளையும், ஆர்.டி.ஐ-யில் தகவல் கேட்டு அம்பலப்படுத்தியவர்களையும் பழிவாங்குவதற்காகவே மத்திய அரசு ஆர்.டி.ஐ சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மாநிலங்களவைவில் தாக்கல்செய்யப்பட்டது.

இந்த மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பேசும்போது, “பணமதிப்பிழப்பு கொண்டு வந்தது குறித்து கேள்வி எழுப்பியது, பிரதமரின் கல்வித் தகுதி குறித்து கேட்டது, வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு எனக் கேட்டது, வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாதவர்களின் பட்டியலைக் கேட்டது, போலி ரேஷன் கார்டுகள் குறித்து கேள்வி எழுப்பியது ஆகியவற்றை முன்வைத்தே அரசு ஆர்.டி.ஐ சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.

மத்திய தகவல் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையத்தை சமநிலைப்படுத்துவதற்காக எனக் கூறப்படுவது உண்மையான காரணம் அல்ல. தகவல் ஆணையத்தை அதிகாரம் இல்லாமல் ஆக்குவதே மத்திய அரசின் திட்டம்.

குஜராத் முதல்வராக இருந்து பிரதமர் ஆன மோடி, பழிதீர்ப்பதற்காகவே திட்ட கமிஷனை இழுத்து மூடினார். அதேபோல, இன்று மேற்சொன்ன ஐந்து விஷயங்களில் பழிதீர்த்துக் கொள்வதற்காக தகவல் ஆணையத்தின் அதிகாரத்தை மட்டுப்படுத்தப் பார்க்கிறார்.

பிரதமரை கேள்வி கேட்பதாலும், மத்திய அரசின் போதாமைகளை பகிரங்கப்படுத்தி வருவதாலும், அதன்மூலம் பா.ஜ.க-வுக்கு சிக்கல் ஏற்படுவதாலும் தகவல் ஆணையத்தை பலம் இல்லாமல் செய்ய திருத்தம் கொண்டு வருகின்றனர்.” எனத் தெரிவித்தார்.