India
“பா.ஜ.க ஆட்சியில் இருப்பதற்கு நிலாவுக்கே போகலாம்” : பா.ஜ.க-வினருக்கு அடூர் கோபாலகிருஷ்ணன் பதிலடி!
நாடு முழுவதும் ஆங்காங்கே ‘ஜெய்ஸ்ரீ ராம்’ என முழக்கமிட கட்டாயப்படுத்தி, இந்துத்வா கும்பல் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த வன்முறைச் செயல்களைக் கண்டித்தும், உடனடியாகத் தடுக்க வலியுறுத்தியும் நாடு முழுவதுமுள்ள 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்.
இந்துத்வ கும்பலின் வன்முறை குறித்து மோடிக்குக் கடிதம் எழுதியவர்களில் மலையாள சினிமா இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணனும் ஒருவர். கேரள திரையுலகின் மதிப்புமிகுந்த இயக்குனரான அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பதிலளித்திருந்தார். அவரது பதிலுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அடூர் கோபாலகிருஷ்ணன்.
அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு ஃபேஸ்புக்கில் பதிலளித்த பா.ஜ.க செய்தி தொடர்பாளர் கோபாலகிருஷ்ணன், “அடூர் கோபாலகிருஷ்ணன் மீது எனக்கு மரியாதை உண்டு. அவர் நாட்டின் கலாசாரத்தை அவமதிக்கக் கூடாது. உங்களால் ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தைக் கேட்க முடியவில்லை என்றால் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு சென்று, உங்கள் பெயரை பதிவு செய்து நிலவுக்குச் சென்றுவிடுங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து மலையாள செய்தி நிறுவனத்துக்கு பதிலளித்துள்ள அடூர் கோபாலகிருஷ்ணன், “இது அரசியல் சாராத கலைஞர்கள் நாட்டின் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம். பிரதமருக்கு கடிதம் எழுதியதை அவமதிப்பது எனக் கூறுபவர்கள், ராமர் பெயரால் நடக்கும் வன்முறையை தடுக்க முயற்சி செய்யலாம். இதுபோன்ற வன்முறைகள் நாடு முழுவதும் பரவி விடக்கூடாது என்ற பயம்தான் கடிதம் எழுத வைத்தது.
இருந்தாலும் அவரின் கோரிக்கையை நான் ஏற்கிறேன். நான் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளேன். நிலவுக்குப் போக வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. அதனால் அவரால் முடிந்தால் சந்திரயான் 3 மூலம் எனக்கு நிலவுக்குச் செல்ல டிக்கெட்டும், ஹோட்டல் அறை ஒன்றும் முன்பதிவு செய்து தரவேண்டும்” எனக் கோரியுள்ளார். இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணனின் இந்தப் பதிலடி வரவேற்பைப் பெற்றுள்ளது.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!