India

மோடியின் வெற்றி செல்லாது? : அலகாபாத் நீதிமன்றம் நோட்டீஸ்! 

பிரதமர் மோடி பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில், உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வென்றார். இவருக்கு எதிராக, முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர், தேஜ் பகதுார் யாதவ் சமாஜ்வாதி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரது வேட்பு மனு எல்லை பாதுகாப்புப் படையின் சான்றிதழை, இணைக்கவில்லை எனக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இந்த வேட்பு மனு நிராகரிப்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் வேட்பாளரை எதிர்த்து நிற்கும் முக்கிய கட்சி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து, தன் வேட்பு மனு தவறான காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டதாகவும், வாரணாசி தொகுதியில் மோடியின் வெற்றி செல்லாது என அறிவிக்கவேண்டும் என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், தேஜ் பகதுார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தேஜ் பகதுாரின் வேட்பு மனு நிராகரிப்புக்கு முன் அது தொடர்பாக விளக்கமளிக்க வாய்ப்பு தரப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, பிரதமர் மோடிக்கு, நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கு, ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.