India

தலித் பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவு செய்த போலீசார் : ராஜஸ்தான் காவல் நிலையத்தில் அட்டூழியம்!

ராஜஸ்தானில் ஒரு திருட்டு வழக்கிற்காக ஜூலை 3ம் தேதி தலித் குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்படுகிறார். அப்போது திருடிய பொருட்களை வீட்டில் வைத்திருக்கலாம் என எண்ணி போலீசார் அந்த இளைஞரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் அந்த இளைஞரின் சகோதரரின் மனைவி இருந்துள்ளார். சோதனை மேற்கொண்ட போலீசார் உங்கள் மைத்துனரை காவல் நிலையம் வந்து கையெழுத்து போட்டுவிட்டு அழைத்துச் செல்லுங்கள் என கூறியுள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண்ணும் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கியது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது பெண்ணின் சாதி பெயரைச் சொல்லித் திட்டி போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதனையடுத்து பெண்ணின் கணவர் தகவல் அறிந்து, மருத்துவமனைக்கு சென்று பார்த்து ராஜஸ்தான் டிஜிபி பூபேந்திர சிங்கிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் என் மனைவி 4 வயது குழந்தைக்கு தாய். அவரது காலில் உள்ள விரல் நகங்களை போலீசார் பிடுங்கியுள்ளனர். மேலும் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்கள் செய்த குற்றத்திற்கு உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, "என்னுடைய மைத்துனர் திருட்டு வழக்கில் கைதான பின்னர் என்னை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்தனர். அங்கு என்னை போலீசார் கொடூரமாக தாக்கினார்கள். பின்னர் இரவு 11 மணிக்கு ஐந்து - ஆறு போலீசார் குடிபோதையில் வந்தனர் அவர்கள் என்னை பாலியல் வல்லுறவு செய்தனர்” என கண்ணீர் மல்க கூறியுள்ளார்

மேலும், போலீசார் தனக்கு போதை மருந்து செலுத்தியதாகவும், இதனால் சுயநினைவு இழந்துவிட்டதாகவும், அவர்கள் வெற்று காகிதங்களில் என் விரல் ரேகையை பதிவெடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

போலீசார் மேற்கொண்ட பாலியல் வல்லுறவு முயற்சியை தான் எதிர்த்தபோது, பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவதாக மிரட்டி மின்சார அதிர்ச்சிகளையும் கொடுத்தனர் எனத் தெரிவித்துள்ளார் அவர். மேலும், காவல் நிலையத்தில் நடந்தது குறித்து யாரிடமும் சொன்னால், கொன்றுவிடுவதாகவும் போலீசார் மிரட்டியுள்ளனர்.

மேலும் தன்னுடைய மைத்துனரை போலீசார் அடித்தே கொன்றுவிட்டு தூக்கிலிட ஒரு கயிற்றைக் கொண்டு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த சம்பவத்தின் போது காவல்நிலையத்தில் இருந்த அனைவருக்கும் தண்டனை வழங்கவேண்டும் என அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

இருவரையும் சித்ரவதை செய்து, பெண்ணை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.பி. ராஜேந்திர குமார் சர்மா பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.