India

100 நாள் வேலை திட்டத்திற்கும் ‘ஆப்பு’ ? : பா.ஜ.க அரசு சூசகமாக அறிவிப்பு - கொடுங்கோலனாக மாறிய மோடி ?

நூறு நாள் வேலை திட்டத்தின் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்) மூலமாக தான் இந்தியாவில் வறட்சியில் தவித்து வந்த விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் ஓரளவு தங்கள் வறுமையை போக்கிக் கொள்ளமுடிந்தது. வறட்சி காலத்தில் வறண்ட நீர்நிலைப் பகுதிகளை தூர்வாறுவதால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அந்த திட்டத்தை பா.ஜ.க இழுத்து மூடும் வேலையில் இறங்கியுள்ளது. இது விவசாய கூலித் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தின் போது ஊரக வளர்ச்சித்துற தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. முன்னதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமான 100 நாள் வேலை திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி-க்கள் கடும் கண்டங்களையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்துள்ளனர். மேலும் இது கவலை அளிக்கக்கூடிய விஷயம் எனவும் தெரிவித்தனர்.

பின்னர் இந்த விவாதம் குறித்து, மத்திய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நாங்கள் மக்கள் நலன் சார்ந்த திட்டமாக முன்னேற்றி இருக்கிறோம். இந்த திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதாக கூறினார். மேலும் இந்த திட்டம் ஏழைகளுக்கானது, எனவே இந்த திட்டத்தை நீண்ட நாட்களுக்கு தொடரவிருப்பம் இல்லை. மோடி அரசின் நோக்கம் வறுமையை அகற்றுவதுதான் அதை அகற்றவே அரசு செயல்படுகிறது எனத் தெரிவித்தார்.

நரேந்திர சிங் தோமர்

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த இந்த வேலை வாய்ப்பு திட்டம் ரத்து செய்யப்படும் என மக்களவையில் மத்திய மந்திரி சூசகமாக கூறியுள்ள நிலையில் , அந்த திட்டத்தின் வேலை நாட்களை 200 நாட்களாக அறிவிக்க வேண்டும், அவர்களின் ஊதியத்தை ரூ.300 ஆக அதிகரிக்க வேண்டும் என விவசாய அமைப்புகளும், எம்.பி-க்களும் கோரிக்கை விடுத்து உள்ள நிலையில் பா.ஜ.க அரசின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து விவசாய அமைப்பின் சார்பில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "நூறு நாள் வேலைத் திட்டத்தில் இரண்டு தவணை, மூன்று தவணையாக அரசு கொடுக்கும் பணத்தை பெற்று அவர்கள் வறுமை ஒழிந்துவிடும் என நினைப்பது முட்டாள் தனம். நேரடியாக அவர்களது வங்கிக்கு சம்பளம் செலவதால் இடைத்தரகர்கள் பிரச்னை இல்லை என்று அமைச்சர் கூறுகிறார். இது வேடிக்கையாக உள்ளது. இன்றைய சூழலில் பல இடங்களில் இடைத்தரகர்கள் சம்பள பணத்தை பெறுவதற்கு தொழிலாளர்களுடன் ஏ.டி.எம் வாசலிலேயே காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.

அதுமட்டுமின்றி ஒரு வருடத்தில் 100 நாட்கள் மட்டும் வேலை செய்தால் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள் என பா.ஜ.க அரசு நினைக்கிறதா? அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமாக தினமும் ரூ.300 வழங்கவேண்டும்" என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.