India
நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போட காங்கிரஸ் கூட்டணி பிளான் : இன்றே நடத்த அடம்பிடிக்கும் பா.ஜ.க!
கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த - காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கடந்த இரு வாரங்களில் 16 எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து ராஜினாமா கடிதம் அளித்தனர். இதனால், கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்களை பா.ஜ.க மும்பைக்கு அழைத்துச் சென்று சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் - ம..ஜ.த அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது விவாதம் இன்று நடைபெற்றது. ஆளும் கட்சிகளின் உறுப்பினர்கள், பா.ஜ.க உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றதால் சட்டபையில் அமளி ஏற்பட்டது.
சட்டப்பேரவை துவங்கியதும், நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவரான பா.ஜ.க-வின் எடியூரப்பா இன்றே விவாதம் நடத்தி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
அதற்கு சபாநாயகர் ரமேஷ் குமார், நம்பிக்கை வாக்கெடுப்பை எப்போது நடத்துவது என்பது எனக்குத் தெரியும். மற்றவர்களின் அவசரத்திற்காக வாக்கெடுப்பை உடனடியாக நடத்த முடியாது எனத் தெரிவித்தார். பின்னர், கட்சிகளின் கொறடாக்கள் தங்களின் எம்.எல்.ஏ-க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கலாம் என அனுமதி கொடுத்தார் சபாநாயகர் ரமேஷ் குமார்.
முதல்வர் குமாரசாமி பேசுகையில், “எனது அரசின் மீதான நம்பிக்கையை மட்டும் நிரூபிக்க நான் வரவில்லை. சபாநாயகர் மீதான கேள்விகளுக்கும் பதிலளிக்க வந்துள்ளேன். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சட்டசபையில் விவாதிக்கத் தயார். பா.ஜ.க ஆட்சியில் நடந்த நில ஊழல்களில் பலர் தப்பிக்க வைக்கப்பட்டுள்ளனர். ஊழல் ஆட்சி புரிந்த பா.ஜ.க-வின் துணையுடன் தான் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் உச்சநீதிமன்றம் சென்றனர்.” எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான பா.ஜ.க மற்றும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி.கே.சிவக்குமார் பேசுகையில், பா.ஜ.க-வினர் எம்.எல்.ஏ-க்களை கடத்திச் சென்று மருத்துவமனையில் வைத்துள்ளனர் என குற்றம்சாட்டினார்.
மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஸ்ரீமந்த் படேல் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது போன்ற புகைப்படங்கள், பத்திரிகை செய்திகளை ஆதாரமாக காட்டினார். தொடர்ந்து பேசிய அவர் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ-க்களை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாத்தின்போது கொறடா உத்தரவு பிறப்பிக்க உரிமை உள்ளதா என்ற பிரச்னையை முன்னாள் முதல்வர் சித்தராமையா எழுப்பினார். இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என அவர் கூறியதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்த காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி செயல்படுத்திய திட்டம்தான் இந்த விவாதம் என பா.ஜ.க குற்றம்சாட்டியது. தொடர்ந்து பா.ஜ.க-வினர் ஆளுநரைச் சந்தித்து இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பா.ஜ.க-வினரின் கோரிக்கையை ஏற்று கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா கர்நாடக சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், முதல்வர் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை இன்றே நிறைவேற்ற பரிசீலிக்க வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்ற இந்த நடைமுறை அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமா அல்லது சட்டமன்றத்தில் அமளியைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!