India
பட்ஜெட்டில் புறநானூற்று பாடல் - வரி விதிப்பு முறையை சுட்டிக் காட்டி நிதியமைச்சர் உரை!
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்; நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்; 5 அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் 10 யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே.- பிசிராந்தையார், புறநானூற்று பாடல்
நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரி வருவாய் பற்றிய அறிவிப்பின் போது மேற்கண்ட, புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டி பேட்சினார்.
முதலில் பிசிராந்தையாரின் பெயரை உச்சரிக்க சிரம்ப்பட்டே அந்த பாடலை தொடங்கினார். அந்த பாடலின் பொருள் பின்வருமாறு “ விளைந்த நெல்லை அறுத்து ஒரு சில கவளங்களாக யானைக்கு உணவாக்கி கொடுத்தால், ஒரு ’மா’ நிலம் கூட பல நாட்களுக்கு போதுமானது. ஆனால், பெரிய நிலமேயாகினும் யானை நேரடியாக புகுந்து வயல்களை மேய்ந்தால், மிதிபட்டு நெல் அழிந்து நாசமாகும். அதுபோல, ஒரு அரசன் முறையாக வரி வசூலித்தால் நாடு சிறந்து விளங்கும். அறிவற்ற முறையில் வரி விதித்தால், எவ்வளவு வளமான நாடாகினும் நாசமாகும்” என பிசிராந்தையார் அரசனுக்கு அறிவுரை சொல்வதாக இருக்கிறது இந்த புறாநானூற்று பாடல்.
இந்த பாடலை முழுவதும் சுட்டிக் காட்டி, பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசு நடத்து தேவையான வரியை மட்டுமே மக்களிடம் வசூலிக்கிறோம் என்றார்.
நேரடி வரி விதிப்பின் மூலம் கிடைத்துள்ள வரி வருவாய் கடந்த 4 ஆண்டுகளில் 78% உயர்ந்துள்ளதாக தெரிவித்தார் நிதியமைச்சர். தொகையளவில் கணக்கிட்டால், 6.5 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 11.37 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
வருமான வரி உச்ச வரம்பை பொருத்தவரை எந்த மாற்றமும் இல்லை. முன்னர் அறிவிக்கப்பட்ட 5 ரூபாய் லட்சம் உச்ச வரம்பே நீடிக்கிறது.
காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் கார்கள் வாங்குவோருக்கு 2.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும் என்றார். நிறுவனங்கள் மீதான வரி விதிப்பை பொருத்தவரை, 400 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் அனைத்துக்கும், 25% கார்ப்பரேட் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்