India
காப்பி அடித்து பேசினாரா திரிணாமூல் எம்.பி? : பாஜக-வுக்கு குட்டு வைத்த அமெரிக்க எழுத்தாளர்!
திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா, கடந்த வாரம் மக்களவையில் தனது அசத்தலான முதல் உரையினால் கவனம் பெற்றார். அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகத்தில் பாசிசத்தின் குறியீடுகள் குறித்த போஸ்டரில் குறிப்பிடப்பட்ட அனைத்து அறிகுறிகளும் இந்தியாவில் காணப்படுகிறது எனப் பேசினார் மஹுவா மொய்த்ரா.
நாம் வரலாற்றின் எந்தப் பக்கத்தில் இருக்க விரும்புகிறோம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அரசியலமைப்பை ஆதாரிக்கும் பக்கமா அல்லது அதை சவக்குழிக்குள் இருக்கும் பக்கமா என்பதை நாம் தான் முடிவுசெய்யவேண்டும் எனப் பேசி மக்களவையை அதிரவைத்தார் அவர்.
அவர் பேசுகையில், “மேலோட்டமான தேசிய வாதத்தில் மூழ்கி மனித உரிமைகளை அவமதித்தல், கருத்து வேறுபாடுகளை ஒடுக்குதல், வெகுஜன ஊடகங்களின் கட்டுப்பாடு, தேசிய பாதுகாப்பு மீதான ஆவேசம் மற்றும் மதம் உள்ளிட்ட பாசிசத்தின் அறிகுறிகளை நீங்கள் உணரவில்லை. கண்களைத் திறந்தால் மட்டுமே அறிகுறிகள் இருப்பதை காண்பீர்கள். இந்த நாடு எல்லா இடங்களிலும் சிதைந்து போயுள்ளது.
அமைச்சர்கள் கல்லூரியில் பட்டம் பெற்றதை காட்ட முடியாத போது ஏழை மக்கள் இந்த நாட்டைச் சார்ந்தவர்கள் தான் என்பதற்கான சான்றிதழை காட்ட வேண்டுமென வற்புறுத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், வெறுப்பு அரசியலால் பெருகி வரும் வன்முறை குறித்தும் ஜார்கண்டில் நடந்த கொடூரக் கொலை குறித்தும் பேசினார்.
இதையடுத்து, பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்த மஹுவா மொய்த்ரா, அமெரிக்காவைச் சேர்ந்த மார்ட்டின் லாங்மேன் எனும் எழுத்தாளர் எழுதிய ‘பாசிசத்தின் தொடக்கநிலை அறிகுறிகள்’ (Early signs of fascism) எனும் கட்டுரையை காப்பி அடித்துப் பேசியதாக பா.ஜ.க-வினர் பரப்பி வந்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மார்ட்டின் லாங்மேன், "இந்திய அரசியல்வாதியின் அந்தப் பேச்சு என்னுடைய கட்டுரையை காப்பியடித்திருப்பதாக சொல்வது நகைப்புக்குரியது. இந்த வலதுசாரிகள் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்." என ட்வீட் செய்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு வலதுசாரிகளையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
மார்ட்டின் லாங்மேன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் பொருத்தி பாசிசத்தின் 12 அறிகுறிகளை விவரிக்கிறார். மஹுவா, தன் பேச்சில் இவற்றில் ஏழு அறிகுறிகளை மட்டும் பா.ஜ.க அரசுடன் பொருத்தி விவரிப்பதுடன் தன் பேச்சில் Holocaust அருங்காட்சியத்தின் போஸ்டரை மேற்கோள் காட்டுகிறார்.
தங்களை கடுமையாகச் சாடுவதை விரும்பாமல், மஹுவா மொய்த்ராவைப் பற்றித் திட்டமிட்டு அவதூறு பரப்பும் நோக்கில் வலதுசாரிகள் இயங்கிவருவதுதான் உண்மையில் மார்ட்டின் லாங்மேன் எழுதி, மஹுவா மொய்த்ரா முன்வைத்துப் பேசிய பாசிசத்தின் அறிகுறிகள் பற்றிய கருத்துகளின் உள்ளடக்கமும் கூட.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!