India

டிக்-டாக் ஆபத்து.. அது உங்கள் போனில் இருக்கும் சீக்ரெட் தகவல்களைத் திருடுகிறது: சசி தரூர் 

உலகம் முழுவதும் ‘டிக்-டாக்’ மிகவும் பிரபலமான செயலியாக உள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக இளம் வயதினர் ‘டிக்-டாக்’ செயலியை பயன்படுத்தி நடனமாடுவதுடன், வசனங்கள் பேசி நடித்து வருகிறார்கள். இந்த டிக்-டாக் செயலிக்கு சமீபத்தில் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. ஆனால், சில நிபந்தனைகளுக்குப் பிறகு தடை நீக்கப்பட்டது.

இந்நிலையில், மக்களவையில் நேற்று முன்தினம் பேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், திருவனந்தபுரம் எம்.பி.,யுமான சசிதரூர், டிக்-டாக் செயலி மூலம் சட்டவிரோதமான முறையில் முக்கியத் தரவுகளை சீனா திருடி வருவதாகவும், இதனால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சமீபத்தில் அமெரிக்கக் குழந்தைகள் குறித்த தகவல்களைத் திருடியதற்காக டிக்-டாக் நிறுவனத்திற்கு அந்நாடு 5.7 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். ஸ்மார்ட் போன்கள், மக்களைக் கவரும் செயலிகள் மூலம் முக்கியத் தகவல்கள் திருடப்பட்டு வருவதாகவும் சசிதரூர் குறிப்பிட்டார்.

சீனத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மூலம் திருடப்படும் இந்தத் தகவல்கள் நமது தேசத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதாக கவலை தெரிவித்த அவர், ஜனநாயகத்தைக் காப்பதற்கான வலுவான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சசிதரூரின் கருத்துக்கு டிக்-டாக் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிக்-டாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு டிக்-டாக் முன்னுரிமை அளிக்கிறது, மேலும் நாங்கள் செயல்படும் சந்தைகளில் உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை நாங்கள் பின்பற்றுகிறோம் '' இவ்வாறு கூறியுள்ளது.