India

மும்பையில் வரலாறு காணாத கனமழை : இதுவரை 47 பேர் பலி எனத் தகவல்!

வர்த்தக நகரமான மும்பையில், தென்மேற்குப் பருவமழை அதி தீவிரமாக பெய்து வந்தது. தாமதமாகப் பெய்த இந்த கனமழை வெள்ளிக்கிழமை தொடங்கி 5 நாட்களாக இரவு, பகலாக விடாமல் கொட்டித் தீர்த்து நகரையே சின்னாப்பின்னமாக்கியது. தற்போது மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததால், சாலைகள், வீடுகள் மூழ்கின; பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளன. 1974-ம் ஆண்டு மும்பையில் இதேபோன்ற மிகப்பெரிய கனமழை பெய்தது. அந்த மழையில் ஒரே நாளில் 375.2 மி.மீ அளவுக்கு கொட்டித் தீர்ததது. அதே அளவுக்கு தற்போதும் 24 மணி நேரத்தில் 375.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

மும்பையின் தானே, பால்கரு உள்ளிட்ட பகுதி மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். கடந்த 29-ம் தேதி புனேயில் மழையின்போது, அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து 22 பேர் பலியானார்கள். இந்நிலையில், மும்பை, தானே, பால்கர், புனேயில் பெய்த கனமழையால் தற்போது வரை 42 பேர் பரிதாபமாக பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் மலாடு கிழக்கு குரார் பிம்பிரிபாடா பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் உள்ள குடிசைவாசிகள் குடியிருப்பில் நேற்று அதிகாலை 2 மணியளவில் மழை காரணமாக தடுப்புச்சுவர் திடீரென இடிந்து குடிசைப்பகுதிகள் மண்ணுக்குள் புதைத்தன.

இதில் வீடுகள் தரைமட்டமாகின; பலர் இடிபாடுகளில் சிக்கிப் புதைந்தனர். தகவல் அறிந்து தீயணைப்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 10 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கடந்த 5 நாட்களில் மழையின் காரணமாக ஏறத்தாழ 45க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் மழை சற்று தணிந்திருப்பதால், இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கியுள்ளது.