India

குடிநீர் விநியோகம் மூலம் 10,000 கோடி வருமானம் ஈட்டும் டேங்கர் லாரி அதிபர்கள் 

நாட்டின் மிகப்பெரிய வர்த்தக நகரமான மும்பையில் மக்கள் தொகைப் பெருக்கத்தால், அதிக அளவில் அதிகரித்து இருக்கிறது தண்ணீர் டேங்கர் லாரி தொழில். இந்தத் தொழில் நாடெங்கும் பரவலாகவே இருந்தாலும், மும்பையில் இது மிகவும் கவனிக்கப்படக் கூடியவையாகவே கருதப்படுகிறது. ஏன் ?அதற்குக் காரணம் இருக்கிறது.

முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு தண்ணீர் லாரிகளுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. ஆனால், தற்போது மும்பை முழுவதுமே டேங்கர் லாரிகள் மூலமாகவே தண்ணீர் விநியோகிக்கப்படுகின்றன. இது எப்படி சாத்தியம் ?

டேங்கர் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டபோது வெறும் 600க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளே இயங்கிக்கொண்டிருந்த சமயத்தில் தற்போது 6200ஐ தாண்டி நகரமெங்கும் லாரிகள் உலா வந்துக்கொண்டிருக்கிறது.

மும்பையில் விபத்தினால் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் தண்ணீர் டேங்கர் லாரிகளில் சிக்கியே பலியாகின்றனர். இது போன்ற தண்ணீர் லாரிகள் எவ்வித போக்குவரத்து விதிகளையும் மதிக்காமல் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன. இதற்கு காவல்துறையினரும் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை.

இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணமாக உள்ளது லாரி உரிமையாளர்களின் செல்வாக்குதான். இவர்கள் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் சில அரசியல்வாதிகளையும் தங்களின் செல்வாக்கு மூலம் அவர்களை லாரி உரிமையாளர்கள் விலைக்கு வாங்கியுள்ளனர்.

மும்பை மாநகரில் குழாய் மூலம் எங்குமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. ஆழ்துழாய் கிணறுகள் மூலமும், டேங்கர் லாரிகள் மூலமாகவே விநியோகிக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் நிலத்தடி நீர் குறைந்துள்ளதால் மக்களின் டேங்கர் லாரிகளின் தேவையையே நாட வேண்டியுள்ளதால் தனியாரிடம் இருந்து பெறாமல் மாநகராட்சி அதிகாரிகளை தங்களது கைப்பாவையாக பயன்படுத்தி மாநகராட்சி தண்ணீரை நகரம் முழுவதும் விநியோகித்து வருகிறது ஒரு சில மாஃபியா கும்பல்.

ஆனால் மும்பை மாநகராட்சியோ அதீத வெப்பத்தின் காரணமாக பூமிக்கடியில் நீர் உறிஞ்சப்படுவதாகவும், ஆவியாவதாகவும் சாக்குபோக்காக கூறிவறுகிறது. இவ்வாறு கணக்கு காட்டப்படும் நீரை டேங்கர் லாரிகள் நாள் ஒன்றுக்கு 2 லட்சத்துக்கும் மேலான ட்ரிப் சென்று மக்களுக்கு அதிக விலைக்கு விற்று வருகிறது.

இதன் மூலம் 10,000 லிட்டர் நீரை விநியோகிக்க ரூ.2,000 வாங்கி வருகின்றனர். மும்பை முழுவதும் இதேபோல் தினந்தோறும் நீர் விநியோகிக்கப்படுவதன் மூலம், சுமார் 48 கோடி ரூபாய் ஒரு நாளைக்கு வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 17 ஆயிரத்து 574 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றது என தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை, அரசியல்வாதிகள் உள்ளிட்டோருக்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஆண்டுக்கு 7 ஆயிரம் கோடிக்கு மிகாமல் லஞ்சம் உள்ளிட்ட வழிகள் செலவழிப்பதாக ஆங்கில இணையதளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தம், டேங்கர் லாரிகள் மூலம் மாநகராட்சி நீரை மோசடி செய்து விநியோகித்து வரும் உரிமையாளர்கள் ஆண்டுக்கு சுமார் 8,000 முதல் 10,000 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது சென்னையிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. இங்கும் தண்ணீர் லாரிகள் மூலமே குடிநீர் அனுப்பப்பட்டு வரும் வேளையில், தமிழகத்திலும் இந்த நிலை வரும் சூழல் எழுந்துள்ளது.