India

புழக்கத்தில் உள்ள நாணயங்களை வங்கிகள் வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை: ரிசர்வ் வங்கி

சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி அதிக அளவில் பரவியது, இதனால் சிறு கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை 10 நாணயங்களை வாங்க மறுத்தனர். அதுமட்டுமின்றி அரசு பேருந்துகளில் பயணிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களைத் தவிர்க்கச் சொல்லி, நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய திருப்பூர் போக்குவரத்துப் மண்டல மேலாளர் தனபால் தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மக்களும் 10 ரூபாய் நாயணங்களை வாங்க மறுத்து வருகின்றனர். இதையடுத்து அந்த நாணயங்கள் செல்லும் என்று ஆர்.பி.ஐ விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, "பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம். புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும்.

எனவே, அதனை யாரும் வாங்க மறுக்க வேண்டாம். பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி, பணபரிவர்த்தனைக்கு சில்லறை நாணயங்களை பயன்படுத்தலாம். அதேபோல அனைத்து வங்கிகளும் நாணயங்களை மாற்றுவதற்கு வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பவேண்டாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சில வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக மீண்டும் புகார் எழுந்தது, இதையடுத்து ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், "வங்கி கிளைகளில் நாணயங்கள் பெறப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க மண்டல மேலாளர்கள் வங்கி கிளைகளுக்கு சென்று கண்காணிக்க வேண்டும். நாணயங்கள் பெறப்படவில்லை என்றால் தலைமை அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.