India

வீட்டை காலி செய்ய நோட்டீஸ் - சந்திரபாபு நாயுடுவுக்கு கிடுக்கு பிடி போடும் ஜெகன் மோகன்!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீட்டை காலி செய்யுமாறு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை சந்திப்பதற்கு கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டிடம் ஆற்றின் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி இடிக்க ஆந்திர அரசு உத்தரவிட்டது. அதன்படி பிரஜா வேதிகா கட்டிடம் 25ம் தேதி இடிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரஜா வேதிகா கட்டிடத்தின் அருகே சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீட்டை காலி செய்யுமாறு ஆந்திர அரசு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சந்திரபாபு நாயுடு தங்கியிருந்த வீடு, அவரின் சொந்த வீடு அல்ல. லிங்கமானேனி ரமேஷ் என்பவருக்கு சொந்தமான அந்த வீட்டில் சந்திரபாபு நாயுடு வாடகைக்கு தங்கி இருந்தார். சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள அந்த பங்களாவை இடிக்க உள்ளதால், அங்கிருந்து 7 நாட்களுக்குள் காலி செய்யும்படி அவருக்கு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசு வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், நதி பாதுகாப்புச் சட்டத்தின் படி, கிருஷ்ணா ஆற்றின் கரையோரம் 500 மீட்டருக்குள் எந்த கட்டுமான பணிகளும் நடைபெறக்கூடாது. ஆனால், கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் சந்திரபாபு நாயுடுவின் வீடு உட்பட 28 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால், அந்த கட்டிடங்களை இடிக்க ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியதும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதிய சந்திரபாபு நாயுடு தனது இல்லத்தையும், பிரஜா வேதிகா இல்லத்தையும் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.