India

தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைப்பு : தமிழர்களை வஞ்சிக்கும் மத்திய அரசு!

தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசை கைப்பாவையாக வைத்துக்கொண்டு தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது மத்திய பா.ஜ.க அரசு. தமிழகத்தின் விவசாயத்தை வேரறுக்கும் எண்ணத்தோடு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்து தமிழக மக்களைப் பழிவாங்கி வருகிறது மத்திய அரசு.

மத்திய அரசின் மிக சமீபத்திய வஞ்சிக்கும் நடவடிக்கை பெட்ரோலியத்துறை மூலமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நடப்பு காலாண்டுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை 33.34% குறைத்துள்ளது மத்திய அரசு.

பொது நிநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கான மண்ணெண்ணெய் அளவைக் குறைத்து ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம். தற்போது மாதத்திற்கு 16,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தமிழகத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிதி ஆண்டின் இரண்டாவது (ஜூலை - செப்டம்பர்) காலாண்டிற்கு தமிழகத்திற்கு 32,292 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் வழங்கப்பட்டதை விட 16,152 கிலோ லிட்டர் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலாண்டில் வழங்கப்பட்டதை விட மண்ணெண்ணெய் 33.34% குறைவாக வழங்கப்பட்டுள்ளது. இதனால், 3 லிட்டர் வழங்கப்பட்டுவரும் குடும்பங்களுக்கு 1 லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கும் சூழல் உருவாகும்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், தமிழக அரசு வாய் மூடி மவுனம் காத்து வருகிறது.