India

ஸ்டெர்லைட் ஆலை மூடல் வெறும் சமாதானத்திற்குத்தானா? - வேதாந்தா குற்றச்சாட்டால் பரபரப்பு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி அந்த ஆலையை உடனே மூடவேண்டும் என கடந்த ஆண்டு பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின் நூறாவது நாளான மே 22-ம் தேதி போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் 13 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இதையடுத்து 2018 மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய அரசின் நடவடிக்கையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

வேதாந்தா தரப்பு வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் சாராம்சம் பின்வருமாறு :
2015 முதல் 2018 வரை ஆலையை இயக்குவதற்கான ஒப்புதலை வருடாவருடம் புதுப்பித்த தமிழக அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் செயல்பாட்டாளர்களின் நெருக்கடிக்குப் பணிந்து 2018-19-ம் ஆண்டிற்கான ஒப்புதலை வழங்க மறுத்து ஆலையை மூட உத்தரவிட்டது.

ஆலையை மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்ததாக எந்த ஆதாரமும் இல்லை. ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, மக்களை சமாதானம் செய்வதற்காக ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சீன நிறுவனம் ஒன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தைத் தூண்டியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியிலும் சீன நிறுவனத்தின் பங்கு உள்ளது. தூத்துக்குடி போராட்டக்காரர்களுக்கு சீன நிறுவனம் நிதி உதவி செய்துள்ளது. என வேதாந்தா நிறுவன வழக்கறிஞர் அடுக்கடுக்காகப் குற்றம்சாட்டியுள்ளார்.