India
ஆணவப் படுகொலையில் தமிழகம் முன்னிலை : இதற்கொரு விடிவே இல்லையா?
திருமணம் என்னும் இரு மனம் இணையும் அத்தியாயத்தில் முதல் படி, எதிர்காலம் குறித்த அழகிய கனவுகளுடன் நடைபழக ஆரம்பிக்கும் புதுமண வாழ்க்கை. அத்தனை கனவுகளையும் இரத்தம் பீறிட்டுச் சிதறச் செய்கிறது ஒற்றை அரிவாள். இது சினிமா படத்தின் ஒரு வரி கதையல்ல, சாதி மறுப்பு திருமணம் செய்யும் பெரும்பாலான காதலர்களுக்கும் இதுவே கதி!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் கனகன். இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கனகன் உயர்சாதி வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், வழக்கம்போல் இவர்களின் காதலுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருப்பினும் எதிர்ப்புகளைத் தாண்டி இருவரும் கரம்பிடித்தனர்.
இவர்களின் திருமணத்தை பொறுத்துக்கொள்ள முடியாத சாதி வெறி பிடித்த கனகனின் சகோதரன் இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் நிகழ்விடத்திலேயே கனகன் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த கனகனின் மனைவி வர்ஷினி பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த சம்பவத்தில் பெயரும் இடமும்தான் மாற்றமே தவிர தமிழகத்திற்கோ, இந்தியாவிற்கோ இது போன்ற நிகழ்வுகள் புதிதல்ல.. தருமபுரியில் இளவரசன், சேலத்தில் கோகுல்ராஜ், உடுமலைப்பேட்டையில் சங்கர், ஓசூரில் நந்தீஷ் - சுவாதி தம்பதியர் இப்படி ஏராளம். இவை எல்லாம் வெளிச்சத்திற்கு வந்தவை இன்னும் இருளில் மறைக்கப்பட்ட ஆணவப் படுகொலைகள் ஏராளம்.
கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த ஒரு ஆய்வறிக்கை, 80-க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் கடந்த ஓராண்டில் நடந்திருப்பதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கிறது. இதில் வெட்கித் தலைகுனியக்கூடிய விஷயம் என்னவென்றால் மற்ற மாநிலங்களைப் பின்தள்ளி தமிழகம் ஆணவப் படுகொலையில் முதலிடத்தில் உள்ளது.
மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கவேண்டிய காவல்துறையே குற்றவாளிகளுக்குத் துணைபோகும் அவலமும் நடந்தேறுகிறது. சாதியை முற்றிலும் ஒழிப்போம் என வாய் தம்பட்டம் அடிக்கும் அரசு, ஆணவப் படுகொலையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை உறுதிப்படுத்தவேண்டும் என பாதிக்கப்பட்டவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.. தீர்வு என்பதுதான் இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !