India

ஓராண்டுக்குள் சென்னையின் நிலத்தடி நீர் முற்றிலும் வறண்டுவிடும்:நிதி ஆயோக் அதிர்ச்சி தகவல் 

கடுமையான தண்ணீர் பஞ்சம் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. மக்கள் தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் சிரமப்படுகின்றார். தண்ணீர் தட்டுப்பாட்டால் மருத்துவமனைகள், பள்ளிகள், உணவகங்கள் அனைத்தும் மூடும் சூழல் உருவாகியுள்ளது. அரசோ மக்களின் பிரச்னைகளை தீர்வு காணாமல் மெத்தனமாக செயல்படுகிறது என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசின் நிதி ஆயோக் நிலத்தடி நீர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "இந்தியாவில் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உட்பட 21 நகரங்களில் அடுத்த ஆண்டு முதல் நிலத்தடி நீர் முற்றிலும் வறண்டுவிடும்.

இந்த சூழலினால் 10 கோடி மக்கள் பாதிப்படைவார்கள் என்றும், தற்பொழுது உள்ள நிலைமை நீடித்தால் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவீத மக்களுக்கு குடிநீர் கிடைக்காது நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சென்னையில் உள்ள 3 ஆறுகள், 4 நீர் நிலைகள், 5 சதுப்பு நிலங்கள், 6 காடுகள் அனைத்தும் முற்றிலும் வறண்டுவிட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மற்ற மெட்ரோ நகரங்களில் மழைப்பொழிவும் அதிகமாக இருந்ததனால் நீர் ஆதாரங்கள் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தால் அதிக செலவு பிடிக்கும் என்பதால், மழைநீரை சேமிக்க கவனம் செலுத்த வேண்டும். நீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்ய அரசும், நாட்டு மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.