India
கொளுத்தும் வெயிலில் தலித் சிறுவனை நிர்வாணப்படுத்தி தரையில் தள்ளிய உயர்சாதியினர்!
மும்பையை அடுத்த வார்தா என்ற பகுதியில் உள்ள கோவிலில் நுழைந்ததற்காக தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனை, ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவன் நிர்வாணப்படுத்தி கொளுத்தும் வெயிலில் அமர வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 வயதே ஆன மதங் என்ற சமூகத்தைச் சேர்ந்த சிறுவன், கோவில் அருகே விளையாடச் சென்றபோது, அச்சிறுவனை சுட்டெரிக்கும் வெயிலில் நிர்வாணப்படுத்தி கோவிலில் போடப்பட்டுள்ள டைல்ஸ் தரையில் உட்காரவைத்துள்ளான் கூலித் தொழிலாளியான உமேஷ் என்கிற அமோல் தோரே.
வார்தா பகுதியில் 45 டிகிரி செல்சியஸ் அளவில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் சாதி வெறி பிடித்த உமேஷ், சிறு பிள்ளை என்றும் கூட நினைக்காமல் சிறுவனை டைல்ஸ் தரையில் தள்ளிவிட்டுள்ளான். சிறுவன் எவ்வளவோ கெஞ்சியும் மனம் இரங்காமல் இக்கொடுமையைப் புரிந்துள்ளான் உமேஷ். கடுமையான வெயிலில் உட்கார வைத்ததால், சிறுவனின் உடல் வெந்துபோயுள்ளது.
இது குறித்து அறிந்த பெற்றோர், பாதிக்கப்பட்ட சிறுவனை வார்தா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், சிறுவனை தாக்கிய உமேஷ் என்ற நபர் குறித்து ஆர்வி பகுதி காவல்துறையிடம் புகார் அளிக்க முற்பட்டபோது அப்பகுதி ஆதிக்க சாதியினர் சிறுவனின் பெற்றோரை மிரட்டியுள்ளனர். இதனை மீறி போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர், சிறுவனை தாக்கிய உமேஷுக்கு பல்வேறு வகையில் எதிர்ப்புகள் கிளம்பியதால் ஊரை விட்டு தப்பிக்க உமேஷ் முயற்சித்துள்ளான். பிறகு அவரை போலீசார் கைது செய்து வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.
ஆனால், கைதான உமேஷை போலீஸ் காவலில் வைக்காமல் நீதிமன்றக் காவலில் வைத்திருப்பதாக சிறுவனின் குடும்பத்தார் குற்றஞ்சாட்டினர்.
பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஆதரவாக வழக்கை எடுத்துக்கொண்ட சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான தன்ராஜ் வன்சாரி, போலீஸ் தரப்பில் கோவிலுக்குள் நுழைந்த சிறுவன் பிரசாதத்தை திருட முற்பட்டதாலேயே உமேஷ் அச்சிறுவனை கீழே தள்ளியதாகவும், கோவிலில் நுழைந்ததற்காக தாக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் பேசிய வன்சாரி, இது ஒரு சிறுவனை காயப்படுத்துவதற்காக மட்டும் மேற்கொண்ட கொடுமை என மட்டும் கருதாமல் வார்தா பகுதியில் சமூக சமத்துவம் இவ்வாறாக உள்ளது என்பதையே சுட்டிக்காட்டலாம் என்றார். அதேபோல், இது போன்ற வன்கொடுமைகள் உயர் சாதியைச் சேர்ந்த சிறுவனுக்கு நடந்திருக்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல், போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், வார்தாவில் இதுபோன்ற வன்கொடுமை சம்பவங்கள் குறித்து அதிக வழக்குகள் பதியப்படுகிறது என்றும், தற்போது நடந்திருப்பது கொடூரமான வன்முறை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவத்தில் வேறு எவரெல்லாம் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!