India

மக்களவை காங்கிரஸ் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு!

மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங். மூத்த தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி 51 இடங்களை மட்டுமே வென்றது. கடந்த ஆட்சிக் காலத்தில் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மக்களவை காங்கிரஸ் தலைவராக செயல்பட்டார். இந்தத் தேர்தலில் அவர் தோல்வியுற்றதால் வேறு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை காங்கிரஸ் தலைவருக்கான போட்டியில் அதிர் சௌத்ரி, சஷி தரூர், கோடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில், அதிர் ரஞ்சன் சௌத்ரி காங்கிரஸ் கட்சியின் புதிய மக்களவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அதிர் ரஞ்சன் சௌத்ரி ஐந்தாவது முறையாக மக்களவை எம்.பி.யாக இருந்து வருகிறார். நீண்டகால நாடாளுமன்ற அனுபவம் பெற்றிருப்பதன் அடிப்படையில் அவர் மக்களவை காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரே காங்கிரஸ் எம்.பி அதிர் ரஞ்சன் சௌத்ரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.