India

மகாராஷ்ட்ராவில் 4 மாதங்களில் 800 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க ஆட்சியில் தொடரும் அவலம் !

மகாராஷ்ட்டிர மாநிலத்தில் 2019 ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் கடன் நெருக்கடி, விளைச்சல் இல்லாத நிலைமையில் போன்ற காரணங்களினால் மாநிலம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்த தகவலை ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் உள்ள தகவலின்படி, 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அதில் கூறியுள்ளனர்.

மேலும் மேலும் 2019ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள இடைப்பட்ட 3மாத கால அளவில் 619 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தத் தகவலை மாநில அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா மாவட்டத்தில் தான் மிக அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக கூறுகிறது. அதனையடுத்து ஓளரங்கபாத், மராத்வாடா, நாக்பூர், நாசிக், பூனா போன்ற இடங்களில் பெரிய அளவில் தற்கொலைகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிசினஸ்லைன் அறிக்கையின்படி, 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் மாதம் விவசாயிகளின் நெடுபயணம் பேரணியை தொடர்ந்து விவசாயிகளின் கடன்தொகையின் ஒரு பகுதியான 34 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டது. இதனால் 4 ஆயிரத்து 500 விவசாயிகள் மேல் இருந்த விவசாய கடன் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

மேலும் அதே அறிக்கையில், 2014 மற்றும் 2018 க்கு இடையில் மகாராஷ்டிராவிலிருந்து 14,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக அந்த நாளிதழ் கூறியுள்ளது.