India

தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : குடிநீர் கேன்களுக்குப் பூட்டுப் போட்டு பாதுகாக்கும் அவலம் !

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது. தற்போதைய நிலையில், நாட்டின் மிக முக்கியப் பிரச்னையாக இது உருவெடுத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஹர்தா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பரஸ்ரம்புரா கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், அப்பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீரை கேன்களில் சேகரித்து வைத்து எஞ்சியுள்ள நாட்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கேனில் நிரப்பப்பட்டிருக்கும் நீரை சிலர் திருடிச் செல்லும் அவலமும் ஏற்பட்டுள்ளது. அதனால் மக்கள் தண்ணீர் கேன்களுக்கு பூட்டு போட்டு நீரை பாதுகாத்து வருகின்றனர். தங்கம், வெள்ளியை விட தண்ணீர் அதிக விலை மதிப்புள்ள பொருளாக தற்போது உள்ளதால் அதனை பத்திரமாக பூட்டி பாதுகாத்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் பஞ்சம் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பட் கூறுகையில், “பரஸ்ரம்புரா கிராமத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு விரைவில் போக்கப்படும். தற்போது வாரத்திற்கு ஒருமுறை அப்பகுதியில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளியில் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.