India

அசுத்தமான கங்கை நதி : சுத்தத்திற்கு ஒதுக்கிய 26 ஆயிரம் கோடி என்ன ஆனது ? 

புண்ணிய நதி என்று அழைக்கப்படும் நதியான கங்கையில் குளிப்பதற்கும், தீர்த்தமாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் சென்று நீராடி வருவார்கள். வடமாநிலங்கள் பலவற்றை இணைக்கும் அந்த கங்கை நதியின் தண்ணீர் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்திரப் பிரதேசம், மேற்குவங்காளம் வழியாகச் செல்லும் கங்கை நதிநீரைப் பயன்படுத்துவது ஏற்றதல்ல, இதுகுறித்து 86 கண்காணிப்பு மையங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் வெறும் 7 இடங்களில் மட்டும் உள்ள தண்ணீர்தான் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் உள்ளது. மீதமுள்ள 78 இடங்களில் உள்ள தண்ணீரில் மனிதர்களுக்குத் தீங்கு ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் அதிக அளவில் இருப்பதாக அவர் கண்டறிந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து நாடுமுழுவதும் கங்கை நதிநீர் செல்லும் 62 பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் வெறும் 18 இடங்களில் உள்ள தண்ணீர் மட்டும் பயன்பாட்டிற்கு ஏற்றதாக உள்ளது. உத்தரகாண்டில் சில குறிப்பிட்ட பகுதியிலும், மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களில் மட்டும் கங்கை நீர் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே அங்குப் பயன்படுத்தும் வகையில் தண்ணீர் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதை தவிர மற்ற இடங்களில் சுத்தம் செய்யப்படாமல் பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் கங்கை நீர் கலக்கும் இடம் வரை பல இடங்களில் கழிநீரே அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக ரூ.26 ஆயிரம் கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது என 2019ம் ஆண்டு ஜனவரியில் பா.ஜ.க அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். இதுவரை கங்கையை சுத்தம் செய்யும் பணி 10 சதவீதம் மட்டுமே நடந்து உள்ளது எனவும் கூறினார். இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 30 முதல் 40 சதவீதம் சுத்தம் செய்யும் பணி நிறைவடையும் எனவும் கூறினார். ஆனால் அவர் தெரிவித்தப்படி 10 சதவீத பணிகள் கூட நடைபெறவில்லை என தெரிகிறது.

கங்கை நதிநீரைச் சுத்தப்படுத்த ரூ.26 ஆயிரம் கோடிகள் செலவு செய்ததாகத் தெரிவித்தார். ஆனால் தற்பொழுது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவலின் படி அவர் சொன்ன பணிகள் நடைபெற்றதாகத் தெரியவில்லை என்று சூழலியல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும், கங்கை நதிக்காக செலவிடப்பட்ட தொகை எங்கு போனது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.