India

முடிவுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்!

17வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி மற்றும் விவரங்களை மார்ச் 10ம் தேதி அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதில், ஏப்.,11 முதல் மே 19 வரை நாடுமுழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்தது. அது மட்டுமில்லாமல் அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டன.

இதனையடுத்து, அரசு சார்ந்த நலத்திட்டங்களை செயல்படுத்துவது, அரசு விழாக்களுக்கு தடை, ஊழியர்கள் இடமாற்றம் என அரசு ரீதியாக எந்த பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மே 23ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. எனவே, மார்ச் 10ம் தேதி முதல் 76 நாட்களுக்கு நாடு முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றுடன் (மே 26) விலக்கிக்கொள்ளப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.