India

“இஸ்லாமியரை தாக்கி வீடியோ போடுவது பா.ஜ.க ஆட்சியில் ட்ரெண்ட்” : கன்னையா குமார்

பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் இந்துத்வ பயங்கரவாதிகள் வெறிச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி இஸ்லாமிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண் மீது இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.

பீகார் மாநிலம் பெகுசராயில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் இந்துத்வ பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். இஸ்லாமிய பெயர் வைத்திருப்பதற்காக அவரை பாகிஸ்தானுக்குக் கிளம்பச்சொல்லி தாக்குதல் நடத்தினர்.

இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து, பெகுசராய் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த கன்னையா குமார் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“பெகுசராயில் ஒரு கும்பலால் ஒரு ஆணும், பெண்ணும் துன்புறுத்தலுக்கு உள்ளாகினர். முஸ்லீம் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு பாகிஸ்தான் செல்லும்படி மிரட்டப்பட்டார். இந்த சம்பவங்கள் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களிலும் பதிவேற்றப்பட்டன.

இப்படி சிறுபான்மையினர் மீதும், தாழ்த்தப்பட்டவர்கள் மீதும் வன்முறையில் ஈடுபட்டு வீடியோ எடுத்துப் பதிவிடுவது 5 வருடங்களாகவே பா.ஜ.க ஆட்சியில் ட்ரெண்டாக இருக்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தண்டனை குறித்து அஞ்சாமல் பெருமை கொள்கின்றனர். ஏனெனில், ஆட்சியில் இருப்பவர்கள் இவர்களது கருத்தியலை ஆதரிக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.