India
நாடு முழுவதும் தேர்தலில் தோல்வியடைந்த நட்சத்திர வேட்பாளர்கள் - அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்
மக்களவை மற்றும் தமிழகத்தில் காலியான 22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. இதனிடையே மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் பலர் தோல்வி அடைந்துள்ளனர்.
இதில் மிக முக்கியமாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வி.ஐ.பி தொகுதியான அமேதியில் பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்துள்ளார். ஆனால் கேரளாவின் வயநாடு தொகுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல் கர்நாடகாவைச் சேர்ந்த0000 முன்னாள் பிரதமர் தேவகவுடா, தும்கூரு தொகுதியில் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் பஸவ ராஜ்யிடம் தோல்வி அடைந்தார். பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் போபால் தொகுதியில் போட்டியிட்ட மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சருமான திக்விஜய் சிங், பா.ஜ.க.,வின் சாத்வி பிரக்யா சிங் தாகூரிடம் தோல்வியை தழுவினார். இவர் போபால் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், கடந்த 5 ஆண்டுகளாக மக்களவை காங்கிரஸ் தலைவராக செயலாற்றிய அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநிலம் குல்பர்கா தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் உமேஷ் ஜாதவ்விடம் தோல்வியடைந்தார்.
அண்மையில் பா.ஜ.க.,வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகரும், எம்.பியுமான சத்ருகன் சின்ஹா பீகார் மாநிலம் பாட்னா சாகேப் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் தோல்வியடைந்தார். எல்.ஜே.டி தலைவர் சரத் யாதவ் மாதேபுரா தொகுதியில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
மேலும் காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி, அனந்த்நாக் தொகுதியில் தோல்வியடைந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். முன்னாள் சபாநாயகர் மீராகுமார் பீகாரில் சசாராம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் சேதி பஸ்வானிடம் போட்டியிட்டு தோல்விடைந்தார்.
டெல்லி முன்னாள் முதல்வர், ஷீலா தீட்சித் வடகிழக்கு டெல்லி தொகுதியில் தோல்வியடைந்தார். குத்துச்சண்டை வீரரும், காங்கிரஸ் வேட்பாளருமான விஜேந்தர் சிங், தெற்கு டெல்லி தொகுதியில் தோல்வியுற்றார்.
டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்த இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கண்ணையா குமார், பீகார் மாநிலம் பெகுல்சாரி தொகுதியில் இரண்டாம் இடம் பிடித்து தோல்வியை தழுவினார்.
வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான நடிகை ஊர்மிளா மட்டோன்கர் தோல்வியடைந்தார். கன்னூஜ் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் உத்திரப்பிரதேச முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பில் யாதவ் இரண்டாம் இடம் பிடித்து தோல்வியடைந்தார்.
பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய நடிகர் பிரகாஷ் ராஜ் 28 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையே பிடித்தார். 2019 மக்களவைத் தேர்தலில் பல முக்கிய தலைவர்கள் தோல்வியை சந்தித்திருப்பது கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!