India

வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயற்சிக்கிறதா பா.ஜ.க? : உதவுகிறதா தேர்தல் ஆணையம்?

கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெற்று வந்த மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் (19.05.2019) நிறைவடைந்தது. பதிவான வாக்குகள் அனைத்தும் வருகின்ற 23ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்கான பணிகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை பா.ஜ.க.,வினர் மாற்ற முயற்சிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் முன் வைத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தனியார் வாகனத்தில் எடுத்துச் செல்வதாக கூறப்படும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அப்படியொரு வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வேட்பாளரிடம் அறிவிக்காமல் வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்படுவதாக கூறி, காஸிப்பூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிடும் அப்சல் அன்சாரி தர்ணாவில் ஈடுபட்டார்.

பதிவான இயந்திரங்களையும், பதிவாகாத இயந்திரங்களையும் தனித்தனி இடங்களில்தான் பாதுகாக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் டிசம்பர் மாத உத்தரவு பல இடங்களில் மீறப்படுள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் எந்த இயந்திரங்களும் எங்கும் கொண்டு செல்லக் கூடாது என்ற உத்தரவும் பின்பற்றப்படுவதில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு தேர்தல் ஆணையம் உதவுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு தலைமையில் எதிர்க்கட்சியினர் 50% ஒப்புகை சீட்டை எண்ணவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தேர்தல் அதிகாரியை இன்று மாலை சந்திக்க உள்ளனர்.