India

“விளம்பரத்தில் வந்தவரே விறகில் சமைக்கிறார்”: மானிய விலையில் சிலிண்டர் திட்டம் படுதோல்வி!

வீடுகளில் சமைப்பதற்கு ஆரோக்கியமான முறையில் எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு 30 ஆண்டுகளுக்கு மேலாக எல்பிஜி சமையல் எரிவாயுவை மானிய விலையில் வழங்கி வந்தது.

இந்த நிலையில் மோடி ஆட்சிக்கு வந்ததும் மானிய விலை திட்டத்தை “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY)" என்று புதிய பெயர் சூட்டி, புதிய திட்டம் போல் செயல்படுத்தினார். மேலும் ஏழைகளுக்கு எரிவாயு இணைப்பு இலவசம் என்று கூறினார். ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மானிய விலையில் எல்பிஜி சமையல் எரிவாயு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

அந்த திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 8 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன் அடைந்ததாகவும், இதனால் பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் தொடங்குவதாகவும் மேடைகளிலும், விளம்பரங்களிலும் பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்து வந்தனர்.

ஆனால் உண்மை நிலைமை வேறு, உஜ்வாலா யோஜனா திட்டம் தோல்வி அடைந்ததாக பல ஆய்வுகள் கூறுவதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. இத்திட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றவர்களில் 1 கோடியே 20 லட்சம் பேர், இரண்டாவது முறையாக எரிவாயு நிரப்பவில்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில், முதல்முறை மட்டும்தான் எல்பிஜி சிலிண்டர் இலவசமாகக் கொடுக்கப்படும், அது தீர்ந்து போனதும், அடுத்த சிலிண்டரை சந்தை விலையில் தான் வாங்க வேண்டும். சில நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கான மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதுதான் நடைமுறை. ஆனால், ஏழைக் குடும்பங்களால் சந்தை விலையில் சிலிண்டரை வாங்க முடியவில்லை. ஏனெனில் எரிவாயு தேவைப்படும் நேரத்தில் அவர்களிடத்தில் பொருளாதார சூழல் மோசமாக இருக்கும்.

இந்நிலையில்தான், உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளியாக மோடியின் விளம்பரத்தில் இடம் பெற்றவரே, தற்போது சாண வறட்டி மூலம்தான் சமைக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவரது பெயர் குந்திதேவி. பிரதான் மந்திரி உஜ்வாலாயோஜனா திட்டத்தில் முதன்முதலாக சேர்க்கப்பட்ட பயனாளிகளில் ஒருவர். இவர், கடந்த 3 ஆண்டுகளில் மொத்தமே 11 சிலிண்டர்கள் தான் வாங்கியுள்ளார். பெரும்பாலும் சாண வறட்டி மூலம்தான் இப்போதும் சமைத்துக் கொண்டிருக்கிறார். எரிவாயு இணைப்பை இலவசமாக வழங்கினாலும், அதிகமான விலை கொடுத்து எங்களால் சிலிண்டரை வாங்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதுதான் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் ஏனைய பயனாளிகளின் நிலையாகவும் இருக்கிறது. மோடியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றவர்களில், 24 சதவிகிதம் பேரே மறுமுறை எரிவாயு நிரப்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.