India

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு: பெற்ற மகளை உயிருடன் எரித்துக் கொன்ற கொடூரம்!

மகாராஷ்டிர மாநிலம், அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள நிஹ்லோஜ் என்ற கிராம பகுதியை சேர்ந்த ராணாசிங்கும், ருக்மினி என்பவரும் காதலித்து வந்தனர். பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் நடைபெற்ற 6 மாதங்களுக்குப் பிறகு, கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி, பெற்றோரை பார்ப்பதற்காக ருக்மினி தனியாக, அவரது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ருக்மினியை அவர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர். நள்ளிரவு நேரம் ருக்மணி தம் கணவர் மங்கேஷை அழைத்து தமது பெற்றோர் தம்மை அடித்ததை கூறி, தம்மை வந்து அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து மே 1-ஆம் தேதி ருக்மினியின் கணவர் ராணாசிங்கும் அங்கே சென்று சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், ருக்மினியின் தந்தை ரமா பாரத்தியா, உறவினர்கள் சுரேந்திர குமார் மற்றும் ஞானஷ்யத் ஆகியோருடன் சேர்ந்து இருவரையும் கட்டிவைத்து அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்துள்ளனர். தம்பதிகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தம்பதியை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. எனினும் ருக்மினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது ராணாசிங்கிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், அவருடைய நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாகவே சசூன் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் அஜய் தவாரே தெரிவித்துள்ளார். இது குறித்து பார்னர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ருக்மினியின் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ருக்மினியின் தந்தை தேடப்பட்டு வருகிறார்.

"ருக்மினியின் தாய் வீட்டார் மிரட்டுவதாக பார்னர் காவல் நிலையங்களில் பிப்ரவரியில் புகார் பதிவு செய்திருந்தோம். இந்த கொடூர சம்பவம் நடப்பதற்கு முன்பாக கூட மிரட்டல்களைப் பற்றி மீண்டும் போலீசாரிடம் கூறினோம், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது” என்கின்றனர் மங்கேஷ் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.