India
நாற்காலியில் அமர்ந்து உணவு உண்டதற்காகத் தலித் இளைஞர் அடித்துக் கொலை!
உத்தரகாண்ட் மாநிலம் தெக்ரி மாவட்டத்திற்கு உட்பட்ட நயின்பாக் டெக்சில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திரதாஸ். தலித் இளைஞரான இவர், மரப் பொருட்கள் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார்.
இவர் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி இரவு, ஷிர்கோட் கிராமத்தில் நடைபெற்ற தனது தூரத்து உறவினரின் திருமண விருந்தில் கலந்து கொண்டார். இந்த விருந்தின்போது, ஆதிக்க சாதியினருக்கு என்று தனியாக ஒரு இடத்தில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு பரிமாறப்பட்டுள்ளது. ஆனால், இந்த பாகுபாட்டை அறியாத தலித் இளைஞர் ஜிதேந்திரதாஸ் ஆதிக்க சாதியினருக்கான பகுதியில் இருந்த சேரில் அமர்ந்து உணவு உண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த, சாதி ஆதிக்க வெறியர்கள், ஒரு தலித் எப்படி தங்கள் முன், இருக்கையில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று கூறி, ஜிதேந்திரதாசை ‘தரதர’வென வெளியே இழுத்து வந்து கூட்டமாக சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் ஜிதேந்திரதாஸ் படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் மயங்கிய நிலையிலேயே தட்டுத்தடுமாறி, தனது வீட்டிற்கு நள்ளிரவில் சென்றவர், யாரையும் அழைக்காமல், வீட்டு வாசலிலேயே படுத்து விட்டார்.
காலையில் ஜிதேந்திரதாஸ் வாசலில் கிடப்பதைப் பார்த்த அவரது தாயார் அவரை எழுப்பியுள்ளார். அப்போது அவரது உடலிலிருந்த காயங்களைப் பார்த்து அதிர்ந்துபோனார்.
பின்னர் உள்ளூரில் இருக்கும் ஆரம்பச் சுகாதார நிலையத்திலும், முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு டேராடூனில் உள்ள ஸ்ரீமகான் இந்த்ரேஷ் மருத்துவமனையிலும் ஜிதேந்திர தாசை சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 28-ஆம் தேதி ஜிதேந்திர தாஸ் உயிரிழந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்த ஜிதேந்திர தாசின் உறவினர்கள், ஜிதேந்திர தாஸ் உடல் வைக்கப்பட்டிருந்த பிணவறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும், தற்போதுவரை ஜிதேந்திர தாஸ் கொலையில் சம்பந்தப்பட்ட ஒருவரைக் கூட போலீசார் கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
ஜிதேந்திர தாஸ் கொல்லப்பட்ட சம்பவத்தில் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று நயின்பாக் டெக்சிலின் ஊராட்சி உறுப்பினர்களில் ஒருவரான சந்தீப் கன்னாவும் குற்றம் சாட்டியுள்ளார். போலீசார் இந்த வழக்கில் எப்.ஐ.ஆர் போட்டதோடு சரி, ஒருவரையும் இதுவரை கைது செய்யவில்லை; ஜிதேந்திர தாசை அடித்துக் கொன்றவர்கள் மீது எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதற்கும் போலீசார் தயாரில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இருக்கையில் உட்கார்ந்ததற்காக தலித் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!